Wednesday, March 07, 2018

சிறுநீரக பாதிப்பு... அடையாளம் காட்டும் 10 அறிகுறிகள்..!

நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகம். "இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்னையால் அவதிபடுகிறார்கள்" என்கிறது சுகாதார துறை அமைச்சகம். இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், பலர் தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்; நோய் முதிர்ச்சியடையும் நிலையில்தான் தெரிந்துகொள்கிறார்கள். இது, வளரவிடக் கூடாத பிரச்னை. வளர்ந்தால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச் செய்யவேண்டிய அளவுக்கு முற்றிவிடும். 

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை சில அறிகுறிகளே காட்டிக் கொடுத்துவிடும். அந்த அறிகுறிகளில் சில...
சிறுநீர் பிரச்னை  
 
நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.    
வீக்கம் / அதைப்பு 
உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.
சோர்வு / ரத்தசோகை
சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.



தடிப்பு 
சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.
மூளையின் குறைந்த செயல்பாடுகள்
மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு,  மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.
குளிர்
ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.
மூச்சுத்திணறல் 
சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.
முதுகுவலி 
பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே  தெரியும்.
முதுகுவலி

குமட்டல் 
சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும். அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.
சுவாசத்தில் வாடை
சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாக மாற்றும்.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி தோன்றினால், உடனே சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சிறுநீரகம் காப்பது, நம் ஆரோக்கியம் காப்பதின் அவசியமான முதல் படி!

(https://www.vikatan.com/news/health/79303-10-symptoms-of-kidney-diseases.html?utm_source=soc&utm_medium=rs )

Thursday, March 01, 2018

மகிழ்ச்சியான வாழ்வுக்கு வேதாத்திரி மகரிஷியின் 18 தத்துவங்கள்!



வேதாத்திரி மகரிஷி, தனது தத்துவங்கள் மூலமாக, ஆன்மிக தேடலுக்கும்,
அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறார். இவரது ஆன்மிக
தத்துவங்கள் அறிவியலையும் உள்ளடக்கி இருப்பது தனிச்சிறப்பு.
கடல் அலை எழுவதை பார்க்கிறோம். அலை என்பது நீரின் அசைவு. அலை என்னும்
இயக்கத்தை நிறுத்திவிட்டால், மீதம் இருப்பது நீர் மட்டுமே. நீர் என்பதே
மூலம். அலை என்பது தோற்றம். கடல் என்ற மூலத்தின் சிறப்பு நிலையே அலை.
இதைப்போலவே இந்த பிரபஞ்சத்தின் இயக்கங்களை நிறுத்திவிட்டால், எஞ்சி
இருப்பது இறைநிலை மட்டுமே என எளிய உதாரணத்தோடு விளக்குகிறார். அண்டவெளியே
இறைவன் என்கிறார்.
மனித உறவுகள் மேம்பட மகரிஷி கூறிய தத்துவங்கள் மிகவும் சிறப்பு மிக்கவை.
1. பேச்சிலும் நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையற்ற
மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
2. பிரச்னைகள் ஏற்படும்போது மற்றவர்கள் முதலில் இறங்கி வர வேண்டும் என
காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். யாரையும்
ஒப்பிடாதீர்கள்.
3. எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ
இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
4- புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை கூறவும் கூட நேரம்
இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
5. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
6. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
7. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
8. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து
கர்வப்படாதீர்கள். தயக்கத்துடனும் பயத்துடனும் பேசாமலும் இருக்காதீர்கள்.
9. மற்றவர் கருத்துகளை, செயல்களை, நிகழ்ச்சிகளையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
10. உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கு கேட்டதை அங்கு
சொல்வதையும் அங்கு கேட்டதை இங்கு சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி
அது ஒருநாள் திரும்பும்.
11. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதிடாதீர்கள். நீங்கள்
முடியவே முடியாது என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்.
12.. உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்
கொள்ளுங்கள். பிடிவாதத்தை கைவிடுங்கள்.
13. அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது
எல்லாவற்றிலும் மிக முக்கியம்.
14. அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை
விடுங்கள்.
15. எந்த விஷயத்தையும் பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.
16. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை
மனதார உணருங்கள்.
17. 'நானே பெரியவன் நானே சிறந்தவன்' என்ற அகந்தையை விடுங்கள்.
வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.
18. மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை
பயன்படுத்தவும் தவறாதீர்கள் என்கிறார் மகரிஷி.
வாழ்க வளமுடன் என ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது பலவீனம் நீங்குவதோடு,
வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது என்கிறார் மகரிஷி.

Wednesday, February 21, 2018

ஸ்டீவ் ஜாப்ஸ்

உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி:

  • வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.
  • நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.
  • உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
  • எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது.
  • வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.
  • நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும் சரி ஒரே நேரம்தான் காட்டும்.
  • செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.
  • ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி !