பள்ளியின் கடைசி நாள்
எண்ணெய் வைத்து தலை வாரி விடுகிறாள் அம்மா
முகத்தில் ஒரே பூரிப்பு தன் மகள் பள்ளியில் சேரப்போகிறாளே!
என் எண்ணெய் வழியும் முகத்தை தன் முந்தானையால்
பவுடரையும் சேர்த்து துடைக்கிறாள்
சுண்ணாம்பு அடித்தது போல் பளிச்சிடுகிறது முகம்,
அப்பாவின் குண்டு விரலை பிடிக்க முடியமல் நடக்கிறேன்
ஒரு புது வித பயத்தோடு புதிய நாளை எண்ணி!
ஆம் அதே வித ஒரு பழைய பயம்
என் முகத்தில் இப்போதும் பள்ளியின் கடைசி நாளை எண்ணி!
பள்ளியில் நடத்தும் அனைத்து போட்டிகளிலும்
கலந்து கொண்டு பரிசு வாங்கும் நோக்கம்,
எப்போதும் நடந்ததில்லை,ஆனால் மனம் நினைக்கும்
அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று,
ஆனால் அடுத்த வருடம்?
எப்போதும் வெளுப்பாக இருக்கும் கரும் பலகை,
குளுகுளுவென இருக்கும் புங்கமர நிழல்,
ஒயாமல் வீசும் வேப்பமரக்காற்று,
கலகல வென்று பேச்சுக்குரலோடு இருக்கும் வகுப்பறைகள்,
ஆசிரியர்களை கண்டாலே நடுங்கும் மாண்வர்கள்
இவை எல்லாம் இனி எப்போது?
பள்ளியின் கடைசி நாள் எற்படுத்திய துக்கம் ஒரு புறம்,
அடுத்தது நான் படிக்க வைக்கப்படுவேனா?
இல்லயா? என்ற கவலை ஒரு புறம்,
இப்படி பலவித கலக்கங்களின் புதுவித பயம்தான்
பள்ளியின் கடைசி நாள்!!
கரும்பலகைக்கு சாறு கொண்டு வந்து பூசி,
கருப்பாக்கி, அடுத்த ஒரு மணி நேரத்தில் அது வெளுப்பாகி,
என்றும், எப்போதும், பட்டாம் பூச்சிகளின் வண்ணத்தோடும்,
தேனீக்களின் சுறுசுறுப்போடும் இயங்கி வரும் என் இனிய நண்பர்களே!
உங்களை இனி எப்போது பார்ப்பேன்?
ஒவ்வொரு கோடை விடுமுறையும் சொல்லில் வடிக்க இயலாதது
ஆற்றில் மீன்களோடு மீனாக,
காட்டில் மானோடு மானாக,
மணலில் மின்னும் பொன்னாக,
காற்றில் மலரின் மணமாக,
ஆடித்திரிந்தது , ஆஹா அது ஒரு வசந்த காலம்.
ஆனால் இனி ஏது அந்த உல்லாசம்!!!!
எப்பொழுது பள்ளி உணவு வேளை வரும் என்று காத்திருந்து,
ஒடி வந்து எதையாவது வாங்கி நண்பர்களோடு சாப்பிட்டு,
விளையாட்டில் கூட நண்பர்களோடு சண்டைப்போட்டு,
ஒரு வாரம் பேசாமல் இருந்து அப்புறம் பேசி....
அடடா என்ன இனிமையான வாழ்கை அது.
அதற்கெல்லாம் இதோ ஒரு முற்றுப்புள்ளி.