Tuesday, March 26, 2013

வத்திக்குச்சி திரைவிமர்சனம்


அன்புள்ள நண்பர்களே!!,

    வணக்கம். மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி :)
நல்லதுக்கே காலம் இல்ல, நல்லவங்க நாட்டுல குறைஞ்சிட்டாங்கப்பா... இப்படி பல வசனகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதை ஒட்டி வந்த படம்தான் நாம் பார்க்க போவதும். அட கண்டுபிடிச்சிட்டிங்களா? ஆமாங்க வத்திகுச்சி படம்தான்.

 மூன்று நபர்கள் தங்கள் வாழ்க்கையை கெடுத்துவிட்டான். அவனை உயிரோடு விடக்கூடாது என்று சபதம் போடுகிறார்கள். அந்த மூவரும் குறி வைப்பது ஒருவனைத்தான் என்று தெரிகிறது. சரி இந்த படத்துல ஹிரோதான் வில்லன் போல இருக்கு என்று நினைத்தால் அது இல்லங்க.

 சக்தி (தீலிபன்) ஷேர் ஆட்டோ ஓட்டுனர். அதே சமத்துவபுரத்தில் வசிப்பவர் மீனா(அஞ்சலி). சக்தி தினமும் மீனா வீட்டின் வாசலில் தவம் கிடக்கும் வாலிபர். ஒரு தலைக் காதல். இரத்தத்டோடு வரும் குணம் தான் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம். அது போல் இயல்பிலேயே அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட குடும்பம். ஒரு முறை குடும்பத்தோடு வெளியில் செல்லும் போது ஏடிம் ல் பணம் எடுக்கும் பொழுது அவர் கழுத்தில் கத்தியை வைத்து , பொது இடத்தில் 10000 ரூபாயை பிடிங்கிக்கொள்கிறார்கள். அது சக்தியின் மனதை மிகவும் பாதிக்கிறது. மிகவும் வலி வாய்ந்த விஷயம், மற்றவர்களால் ஏமற்றப்படுவதுதான். அது அவரை நிம்மதியாக தூங்க விடுவதில்லை. அது அவரை மிகவும் பாதிக்கிறது. இதனால் அந்த ரௌடி கும்பலிடம் அடிக்கடி மோதி பகையை வளர்த்துக் கொள்கிறார். தன்னையும் உயர்த்திக் கொள்கிறார். சண்டை பயில்கிறார், நன்றாக சாப்பிடுகிறார். கடைசியில் அவர்களுடன் மோதி 10000 பணத்தை திரும்ப வாங்கி விடுகிறார். ஆனால் அந்த ரௌடியின் மனதில் நிரந்தர ரௌடியாகி விடுகிறார். இவர் அனைவருக்கும் உதவி செய்வதால் , இவருக்கு இன்னும் சில எதிரிகளும் கிடைத்து விடுகிறார்கள். ஒரு சாதரண இளைஞன் முறியடித்து வாழ்வில் ஜெயிக்கிறானா? இல்லையா? என்பதே கதை.

 இதேப் போல் பல படங்கள் வந்தாலும். இதில் கொஞ்சம் நம்பும்படியாக சில காட்சிகளும், கதையமைப்பும் இருக்கிறது.
அதுவே படத்தின் மிகப்பெரிய பலம். அறிமுக நடிகரான திலீபன் , மிகவும் எதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார். அஞ்சலியிடம் வழியும் பொழுதும் சரி, உன்னையே மறந்தாலும், அன்னையை மறக்காதே என்று அன்னையை நெகிழ்த்துவதும் சரி, ஆக்ரோஷமாக  எதிரிகளிடம் மோதும் போதும் சரி அழகாக பலவிதமான பரிணாமங்களை காட்டுகிறார்.

அஞ்சலி சொல்லவே வேண்டாம். அவரின் அழகில் அனைவரும் நாய்குட்டிப் போல் தொடரலாம் :). அவரின் ஆங்கில வகுப்புக் கலாட்டா மிகவும் அருமை. அதுவும் எங்கே பார்த்துக் கொண்டாலும் "Have a nice day" என்று அலட்டிக்கொள்வது அருமை. ரொம்ப பந்தா பண்ணுவதும், அலட்டுவதும் கூட தனி அழகு. :)

சரண்யா பொன்வண்ணன், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான தாய். ஆனால் அவர் காட்டும் பாசம் நிஜமான பாசமாக நம்மை நெகிழ்த்துகிறது. ஆரம்ப காட்சியில் பையனுக்கு அறிவுரை சொல்லும் பொழுது, "அப்பா வாட்ஸ் மேனாம், அவங்க அண்ணன் வார்டு பாயாம். பெரிய படிச்ச குடும்பம்டா, எல்லாம் கவுர்ன்மெண்ட் உத்தியோகம். " என்று அவர் வெள்ளந்தியாக சொல்வது நம்மை அறியாமல் சிரிக்க வைக்கிறது.

நிறைய நட்சத்திரங்கள் உதாரணத்திற்க்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஜெயப்பிரகாஷ், சம்பத் , ஜகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் கின்ஸ்லின் முயற்ச்சியை நிச்சயமாக பாராட்ட வேண்டும். படத்தை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். ஒரு கிரைம் பட அளவிற்க்கு போரடிக்காமல் கொண்டு சென்ற விதம் அருமை. எல்லா படத்திலும் முடிவு காட்சியில் நாயகன் அடித்து நொருக்கி விடுவார் அனைவரையும். ஆனால் இந்த படத்தில் நல்ல லாஜிக் சொல்லப் படுகிறது. நிறைய ஓட்டைகளும் இருக்கிறது உதாரணத்திற்க்கு அவரை அடைத்து வைத்து விட்டு, எல்லா வேலையும் செய்து கொண்டிருப்பது.கடைசியில் கொள்வது போன்ற விஷயங்கள்.

இசை கிப்ரான்(Ghibran), சிலப் பாடல்கள் நன்றாக இருக்கிறது. ஆனால் மனதில் நிற்க்கவில்லை.



  ஒரு சாதரண மனிதன் விழித்துக் கொண்டு நடக்கும் தப்புகளை தட்டிக் கேட்க வைத்திருப்பது மிகவும் அருமை. சில நேரங்களில் நமக்கு பயமாக கூட இருக்கிறது, இப்படி நம் நாட்டில் எங்கோ நடக்கிறது என்பது. நம்மிடம் இது போன்ற படங்கள் கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நல்லது. நல்லது செய்ய நினைத்தால் நல்லதே நடக்கும் என்பதே நம்பிக்கை.

நீங்களும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மீண்டும் சந்திப்போமா?

Monday, March 18, 2013

கற்றுக் கொண்டதை வெளிப்படுத்தினால்தானே மகிழ்ச்சி...!



இங்கிலாந்து போலீஸ், தீவிரவாதக் கும்பல் ஒன்றை சுற்றி வளைக்க முற்பட்டபோது தீவிரவாதிகள் தப்பித்தனர். அவர்களுடைய நாய் மட்டும் பிடிபட்டது. ஆச்சரியம் என்னவென்றால், தீவிரவாதக் கும்பல் போய் வரும் இடங்கள், ஒளிந்திருந்த இடங்கள், எல்லாமே அந்த நாய்க்கு நன்றாகத் தெரியும்.

வருத்தம் என்னவென்றால், அந்த தீவிரவாதக் கும்பல் பேசிய ஹீப்ரு மொழியில் கட்டளை பிறப்பித்தால்தான் அந்த நாய்க்குப் புரியும். கட்டளைக்குக் கீழ்படியும்.

ஹீப்ரு மொழி தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி இதழ்களில் விளம்பரங்கள் கொடுத்தது காவல்துறை. ஒரே ஒருவர் வந்தார். அவரை வரவேற்று உபசரித்த காவல்துறை தங்களுக்கு வேண்டிய விபரங்களை அவரிடம் சொல்ல, அவரும் நாய்க்குக் கட்டளைகள் பிறப்பித்தார். நாயும் அடிபணிந்தது. மிக முக்கியமான துப்புகள் துலங்கின.

அவருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. பத்தாயிரம் பவுண்ட் தருவது, மேலும் கேட்டால் பேரம் பேசுவது என்று முடிவெடுத்தார்கள். அவர்கள் பணம் தரும் முன்னரே அந்த மனிதர் பத்தாயிரம் பவுண்டுகளை எடுத்து காவல்துறைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். காரணம் கேட்டபோது சொன்னார்.

“ஏதோ ஓர் ஆசையால் ஹீப்ருமொழி படித்தேன். இந்த மொழியைக் கற்க நான் போனது என் மனைவிக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. “இது வேண்டாத வேலை! இங்கிலாந்தில் நீ ஹீப்ரு மொழியில் பேசினால் ஒரு நாயும் கேட்காது” என்றாள். அதைப் பொய்யாக்கி என் மானத்தைக் காப்பாற்றினீர்களே! அதற்குத்தான்” என்றார் அந்த மனிதர்.

கற்றுக் கொண்டதை வெளிப்படுத்தினால்தானே மகிழ்ச்சி...!

(Thanks to Indru oru thagaval)


தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள்


மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!

தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன?

## பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்றவைகளை சாப்பிடவேண்டும்.

* ஒரு நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டியதிருக்கும்?

## சராசரியாக ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெளியேறும். அப்படிப்பட்ட தருணங்களில் 4 பேடுகள் வரை பயன்படுத்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், தொற்று ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.

* மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்?

## மூளையில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போக்குக்கு காரணம். பெரும்பாலும் இந்த பிரச்சினைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் கருப்பையில் ஏற்படும் நோய்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

* மாதவிலக்கு காலத்தில் மார்புகள் கனத்துடன் வலிப்பது ஏன்?

## மாதவிலக்கின் ஒரு வாரத்திற்கு முன்போ, மாதவிலக்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில நாட்களில் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

நன்றி
டாக்டர் கே.எஸ்.ஜெயராணி and Womens article

Thursday, March 14, 2013

வித்தியாசமாய் சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி


வித்தியாசமாய் சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதனை அறிய நினைத்தால் அது அடங்கும். மனதை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனிடம் தான் இருக்கிறது.

* எல்லா உயிர்களிடமும் இறைவனைக் காண்பவர்கள் மேன்மையானவர்கள். அறிவுநிலையில் மேம்பட்டவர்களால் மட்டுமே அந்நிலையை அடைய முடியும்.

* ஞானத்தை அடைந்ததற்கான அடையாளம், எந்தச் சூழ்நிலையிலும் கோபம் ஒருவனைத் தீண்டாமல் இருக்க வேண்டும்.

* தேவையான இடத்தில் சினம் கொண்டது போல நடிக்கலாம். ஆனால், எதிராளியின் நன்மைக்காக தான் அந்தக் கோபம் இருக்க வேண்டும்.

* மனதில் எண்ணிய எண்ணம் எல்லாம் ஒருநாள் ஈடேறும். ஆனால், நம் மனதில் உறுதியும், ஒழுக்கமும் இருந்தால் அன்றி எண்ணம் ஈடேறுவதற்கான சாத்தியம் இல்லை.

* ஒரு செடியைப் பார்த்துக் கூட வாழ்க வளமுடன் என்று வாழ்த்துங்கள். அதனால், அச்செடியில் உள்ள பலவீனம் நீங்கி வளமுடன் செழித்து வளரும்.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்வதால் நம் மனம் ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டுவிடும். அப்போது நம்முடைய பிறவிச் சங்கிலியில் இருந்து நம்மால் விடுபட முடியாது.
(Thanks to Penmai)

Friday, March 08, 2013

ஹ......ரி.....தா....ஸ்.


அன்புள்ள தோழமைகளே!!


வணக்கம். மீண்டும் ஒரு நல்ல படத்தோடு உங்களை நான் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சமீபகாலத்தில் வெளியான எத்தனையோ படங்களைப் பற்றி எழுத நினைத்தாலும் அவ்வளவு விருப்பம் வரவில்லை. மனம் தழுப்புகிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த படத்தைப் பார்த்த பின்பு நிச்சயம் தழும்பும். அட கண்டுபிடிச்சிட்டிங்களே ஹ......ரி.....தா....ஸ்.


குழந்தைகள் சந்தோஷத்தை அள்ளித் தரும் தேவதைகள். குழந்தைகளைப் பற்றிய படம்தான் இது. என்கவுன்டர் சிறப்பு அதிகாரியாக சிவதாஸ்(கிஷோர்). அவருடைய குழந்தை ஹரிதாஸ் (ப்ரிதிவிதாஸ்). ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தை. இந்த குறைபாடு உடைய குழந்தை யாருடனும் பேசாமல், தனக்குள் ஒரு உலகை உருவாக்கி அதில் வாழ்வார்கள்.
பிறந்த உடன் தாயை இழந்து விடும் ஹரி, பாட்டியுடன் வளர்கிறார். பாட்டியும் இறக்க தந்தையில் கீழ் வளர்கிறார். எதையோ பார்த்து பயந்த ஹரியை மருத்துவரிடம் கொண்டு காட்டும் பொழுது, இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று திட்டுகிறார். மருத்துவரின் ஆலோசனைப்படி சாதரண பள்ளியில் சேர்க்க சொல்லுகிறார். அங்கே அழகு தேவதையாக நம்ம அமுதவள்ளி (சினேகா) ஆசிரியையாக. ஹரியின் கையில் எப்பொழுதும் ஒரு குதிரை பொம்மை இருக்கிறது. அதுதான் ஒரு திருப்புமுனையாக இருக்கிறது ஹரியின் வாழ்வில். எப்படி இந்த தந்தை இந்த குழந்தையை இந்த குறைபாட்டில் இருந்து மீட்டு ,வேதனை மனிதனாகமல் சாதனை மனிதனாக மாற்றுகிறார் என்பதே கதை.


கிஷோர் அந்த பார்வையிலேயே ஆளை அசத்துகிறார். ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்கும் போதும் சரி, ஒரு பாசமுள்ள தந்தையாக நீ மட்டும்தாண்ட எனக்கு இருக்கு, உனக்கு என்ன வேணும்னே எனக்கு தெரியலேயே என்று உடைந்து அழும் போதும் சரி அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். குழந்தைக்கு தானே கோட்சாக மாறி "வா.. வா... ஓடு.. ஓடு..." என்று சொல்லும் பொழுது நாமும் நம்மை அறியாமல் ஓடு.. ஓடு.. என்று சொல்ல ஆரம்பிகிறோம்.


சினேகா மீண்டும் தன் முத்திரையை அழகாக பதித்திருக்கிறார். குழந்தைகளுக்கு பாடம் சொல்லும் பொழுது நடித்து காட்டும் இடங்களில், ஹரியின் தந்தையும் உடன் அமர்ந்து இருப்பதால் தடுமாறும் பொழுது வெட்கத்தையும், ஹரிய காணம்ங்க என்று சொல்லி கதரும் பொழுது தாய்மையையும் வெளிப்படுத்தி அசத்துகிறார். ஒவ்வொரு காட்சியிலும் நெஞ்சை அள்ளிச் செல்கிறார்.


அட யாருங்க அந்த குட்டி பிரிதிவி. அப்படி ஒரு அசத்தல் நடிப்புங்க. அவனுடைய அந்த ஏக்கத்தையும், இயலாமையும் பார்த்து கன்னங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் கோடுகள். இப்படிப் பட்ட அனைத்து குழந்தையும் அணைத்து மீட்டெடுக்க வேண்டும் போல் ஒரு பரபரப்பு உண்டாகிறது. ஆனால் படம் விட்டு வரும் பொழுது நம் நெஞ்சம் முழுவதும் ஹரிதான் நிறம்பி வழிகிறான்.


இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் வியாபார நோக்கோடு கொஞ்சம் வன்முறையும் சேர்த்திருப்பது, குடத்துப் பாலில் துளி விஷம் கலந்தது போல் இருக்கிறது. கதையை வேறு மாதிரி கொண்டு சென்றிருக்கலாம். ஆதி (பிரதீப் ரவாட்) வில்லன் வேண்டும் என்பதற்க்காக சேர்த்தது போல் இருக்கிறது. சூரி கொஞ்சம் கலகலக்க வைக்கிறார்.

எந்த குழந்தைக்கும் தாயோ அல்லது தந்தையோ மிக முக்கியம் என்பது மிக தெளிவாகிறது. ஒரு பொது இடத்தில் ஹரி தெரியாமல் செய்யும் தவறுக்கு , ஒருவர் திருட்டு பட்டம் கட்டுவதும், அப்பொழுது சினேகா, அவன் ஒரு சிறப்பு குழந்தை அவனுக்கு இது தெரியாது என்று கதறும் பொழுது, பைத்தியமா.. என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் கேட்பார். அவர் இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தின் அங்கமாக பார்க்கிறேன். ஏனென்றால் நம் மக்கள் தனக்கென்று வந்தால் அது வலியாகவும், மற்றவருக்கு வந்தால் அதை நோயாகவும் பார்க்கிறோம். இந்த எண்ணத்தைக் கூட மாற்ற வேண்டும். இது என்ன என்று தெரியாதவர் கூட தெரிந்து கொள்ள வைத்த இயக்குனருக்கு (G.N.R குமரவேலன்) நிச்சயம் நாம் நன்றியையும், பாராட்டையும் வழங்குவோம். டாரே சமீன் பர் (taare zameen par) என்ற இந்தி படமும் இது போன்ற ஒரு குறைபாட்டை வெளிப்படுத்தும் படம்தான். அதே தாக்கம் எனக்கு இந்த படத்தை பார்க்கும் பொழுதும் ஏற்பட்டது.


Movie Poster
Directed by
G.N.R.Kumaravelan
Written by
G.N.R.Kumaravelan
A.R.Venkatesan
Starring
Kishore
Sneha
Prithviraj Das
Soori
Pradeep Rawat
Music by
Vijay Antony
Cinematography
R. Rathnavelu
Editing by
Raja Mohammed
Studio
DR V RAM Production Private Limited
Release date(s)
February 22, 2013
Country
India
Language
Tamil

இசை விஜய் ஆண்டனி, காதிர்க்கு இனிமையான பாடல்களை தந்திருக்கிறார். குத்து பாட்டு இல்லாத படம் . அன்னையின் கருவில் பாடல் உடலில் புது மின்சாரத்தை பாய்ச்சுகிறது என்றால் அது மிகையாகாது. அன்னாமலை என்பவர் பாடல் வரிகளை நமக்கு தந்திருக்கிறார். இந்த பாடலுக்காக நிச்சயம் இவருக்கு ஒரு ஓ போடலாங்க!!....




இந்தியாவில் மட்டும் 88 குழந்தைகளில் 2 என்ற விகிதத்தில் பிறப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இது போன்ற குழந்தைகளை தெய்வக் குழந்தையாக பாவித்து, அன்பு காட்டி நாம் அனைவரும் காப்போம் என்று உறுதி கொள்வோம். மீண்டும் சந்திப்போமா!!!


வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!..

மகளிர் தின நாள் வாழ்த்துக்கள் :)


அன்புள்ள தோழிகளே!!

      மகளிர் தின நாள் வாழ்த்துக்கள் :)

பெண்ணே!! நீ.....

மதி நுட்பம் வாய்ந்தவளாம்....

புது வனப்பாம் செந்தமிழ் மொழியை போற்றுபவளாம்......

பெண் புத்தியை முன் புத்தியாக ஆக்கி வருபவளாம்.....

தனக்கென்று வாழாமல் குடும்பத்திற்க்காக வாழ்பவளாம்...

குலப்பெருமையை போற்றுபவளாம்.....

நல்ல குண நலங்களை பேணுபவளாம்....

குறிப்பறிந்து நடப்பவளாம்.....

மனதில் யானை பலம் கொண்டவளாம்....

கண்ணுக்கும், கருத்திற்க்கும் புதுமையானவள்.....

வீரத்திற்க்கும், விவேகத்திற்க்கும் கீரிடமானவளாம்......

தாய்மைக்கும், பாசத்திற்க்கும் அடிமையானவளாம்.......

தரணிக்கெல்லாம் ராணியானவளாம்......

இத்தகைய பெருமை கொண்ட பெண்ணையை போற்றுவோம்..... அவளை பாதுகாப்போம் வன்கொடுமைகளில் இருந்து

(கருவிலேயே சமாதி கட்டி, வெளி உலகத்தை பார்க்காமலேயே மறித்த (சிசுக்கொலை) தேவதைகள் அனைவருக்கும் இந்த கவிதை சமர்ப்பணம். நன்றி!!      இதை எழுதியவர் என் தாய் கிருஷ்ணவேணி, அவருக்கும் என் நன்றி.)