அன்புள்ள நண்பர்களே,
வணக்கம். நலம்தானே? நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு நெஞ்சைத் தொட்ட படம் :)
கௌரவம். இந்தப் படம் வருவதற்க்கு முன்பே பெரும் தாக்கத்தை நிறைய் இடங்களில் ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. நடித்து, தயாரித்து வழங்கி இருப்பவர் திரு பிரகாஷ்ராஜ் அவர்கள். இப்படத்தை இயக்கி இருப்பவர் திரு ராதாமோகன் அவர்கள்.
அர்ஜுன் (அல்லு சிரிஷ், இவர் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனாவின் தம்பி) ஒரு தொழில் விஷயமாக தமிழகத்தின் ஒரு மாநிலத்திற்க்கு வருகிறார். எதிர்பாராத விதமாக அவருடைய விமானம் காலதாமததிற்க்கு உள்ளாகிறது. அவருடன் படித்த நண்பன் கிராமம் அருகில் இருப்பதால் சென்று பார்த்துவிட்டு வர நினைக்கிறார். அங்கே அவர் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்களும், அவர்களுடைய அணுகுமுறையும், இன்னும் தொடரும் தனித் தனியே இருக்கும் டீ குடிக்கும் டம்ளரும் அவரை வரவேற்கின்றன. இதனால் சுவாரஷ்யம் இருந்தாலும்
தன்னுடைய நண்பர் பெயரை சொல்லி விசாரிக்கிறார். அவரை வித்தியாசமாக பார்க்கும் டீக்கடை மனிதர்கள், இங்கெல்லாம் நான்கு பக்கமும் சுடுகாடு தம்பி என்று விரட்டி விடுகிறார். இதை பார்த்துக் கொண்டிருக்கும் மாசி என்பவர், அவர்களை பின் தொடர சொல்லி செல்கிறார். அவர் சண்முகம் (நண்பனின் பெயர்) இப்பொழுது இங்கே இல்லை ஆறு மாசத்திற்க்கு முன்பு அந்த ஊரின் பெரிய மனிதரின் மகளை இழுத்துக் கொண்டு ஓடி விட்டதாக சொல்கிறார். சாதிகளால் பிளவுப்பட்டிருக்கும் அந்த கிராமம், இவன் இப்படிப்பட்ட காரியத்தை செய்ததால் எவ்வளவு பாதிப்பை அடையும் என்று வேதனைப் படுகிறார்.
இதைக் கேட்டு மனம் வேதனைப் பட்ட அர்ஜுன், நண்பனின் தந்தையை பார்க்க விரும்புகிறார். சண்முகத்தின் தந்தை கையைப் பிடித்துக் கொண்டு அழுகிறார். அவன் எங்கே இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் எங்கேயாவது இருக்கிறான் என்று தெரிந்தால் பரவாயில்லை என்று. இது அர்ஜுன் மனதை மிகவும் பாதிக்கிறது. சென்னை சென்றதும் தன் நண்பனிடம் சொல்லி, ஒரு வாரம் போய் அங்கே தங்கி பார்க்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். சண்முகத்தின் பெயரை எடுத்தாலே பலப் பிரச்சினைகள் கிளம்புகின்றது.அங்கே சென்றார்களா, சண்முகத்தை கண்டு பிடித்தார்களா? ஏன் அவர்கள் ஆறு மாதமாக யாரையும் தொடர்பு கொள்ளவில்லை? என்பதே கௌரவம்.
ஒவ்வொரு படத்திலும் நல்ல அழகான விஷயங்களை அழகாக சொல்பவர்கள் ராதாமோகன் மற்றும் பிரகாஷ்ராஜ் கூட்டணி.
இந்தப் படத்திலும் அது தவறவில்லை. ஒவ்வொரு காட்சியும், ஒரு விதமான விறுவிறுப்போடும், இயல்பாகவும் நகர்கிறது. அர்ஜுனிடம் ஒரு விபத்து நடந்து விட்டது, கொஞ்சம் காப்பாத்துங்க என்று கேட்கிறார் யாழினி(யாமி கவுதம்). பார்த்த உடன் காதலில் விழும் காட்சி இங்கேயும் நடக்கிறது ஆனால் அது இயல்பாகவும், அழகாகவும் இருக்கிறது. ஆனால் அதை மிகைப்படுத்தாமல் இயல்பாக்கி இருப்பது சிறப்பு.
நண்பனுக்காக நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்வது, அதற்க்காக பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அனைத்தும் வருவது போன்றவை நன்றாக இருக்கிறது. இவர்களின் தேடலில் யாழினியும், மாசியும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் மிக இயல்பு. ஆனால் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம். பொட்டு கதாபாத்திரத்தைக் காட்டும் பொழுதே நமக்கும் தெரிகிறது. அது ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று. அந்த கிராமத்தின் அழகை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். கண்ணுக்கு அப்படி ஒரு குழுமையும், பரவசத்தையும் தருகிறது.
வசனம் நிறைய இடங்களில் மிக அற்புதம். நாட்டுல தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் இருக்கும் அளவிற்க்கு செய்திகள் இல்லை , தருவித்த பீட்சா அரை மணி நேரத்தில் வரவில்லை என்றால், காசு குடுக்காம இலவசமா சாப்பிடற ஊர்ல இருந்து வர்றீங்க, 20 வருடங்களில் யாரும் என் ஜாதியை கேட்டதில்லை சென்னையில், என் குலத்து பெண்களை சூரையாடும் பொழுதோ அல்லது எங்களை அடிக்கும் பொழுதோ தீட்டு வருவதில்லை மற்ற நேரங்களில் எங்களை தொடுவதில்லை, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நிறைய குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிது நேரப்படத்திற்க்குள் நம்மால் அனுமானிக்க முடியும் விஷயம் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது. இந்த அனுமானங்களை தவிர்க்க இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் திரைக்கதையில் செலுத்தி இருக்கலாம். இன்னும் கூட கதாபாத்திரங்களுக்கு கணம் சேர்த்திருக்கலாம் உதாரணத்திற்க்கு நாசர், பொட்டு மற்றும் சண்முகம் கதாபாத்திரத்திற்க்கு.
பசுபதியாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். குறை சொல்ல முடியுமா? நன்றாக உணர்ச்சிகளைக் கொட்டி இருக்கிறார். மனைவியாக நடித்திருப்பவரை கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம் என்பது என் எண்ணம். பெண்ணின் சாவில் கூட சாதரணமாக நடித்திருந்தார். அண்ணியும் கூட, அந்த சோகம் நம் நெஞ்சைத் தொடவில்லை. மிகவும் சாதரணமாக இருக்கிறது. பசுபதியின் மகனாக நடித்திருந்தவர் நல்ல நடிப்பு. கோபம், படபடப்பு, ரோஷம் முதலானவை.
இசை தமன். லேசாக நம் நெஞ்சைத் தொடுகிறது ஒரு கிராமம் பாடல். மற்றவை அவ்வளவாக எட்டவில்லை. இந்த மாதிரி கதைகள் இந்தியா முமுவதும், குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக நடக்கிறது என்பது நெஞ்சைத் சுடும் நிஜம்.
எப்பொழுதும் உண்மை சுடத்தானே செய்யும்? இன்னும் எத்தனை பெரியாரும், பாரதியாரும், அம்பேத்காரும் வந்தாலும் நம் மக்களின் சாதி வெறியும், வெட்டி கௌரவமும் மாறாது போல் இருக்கிறது. அறியாமையை அகற்றி அனைவரும் சமம் என்ற எண்ணத்தை நம் இளைய தலைமுறையிடம் உருவாக்குவது மட்டுமே இதற்க்கெல்லாம் தீர்வாக அமையும். எதிர்ப்பார்ப்போம் இனி வரும் தலைமுறையிடம் மாற்றம் இருக்கும் என்று. இதை படமாக்கி ஒரு அதிர்வை ஏற்படுத்தியதிற்க்காக நிச்சயம் பிரகாஷ்ராஜ் பாராட்டப்படுவார். நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
நன்றி!! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!
மீண்டும் சந்திப்போமா?