"முகங்கள்"
"இந்தியாவின் பாசமிகு பால்காரர்! - வர்கீஸ் குரியன் - இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை"
ஆனந்த்(குஜராத்):”பாம்பேயில் விற்கும் பால் லண்டனில் சாக்கடை நீரை விட அசுத்தம்” – இங்கிலாந்துக்கு பயணிக்கும் வேளையில் யாரோ கிண்டலடித்தது வர்கீஸ் குரியன் என்ற இந்தியருக்கு ரோஷத்தை ஏற்படுத்தியது. இந்த ரோஷம் இந்தியாவில் உற்பத்தியாகும் பாலை உலகில் மிகச் சிறந்ததாக மாற்றவேண்டும் என்ற சிந்தனையை குரியனிடம் ஏற்படுத்தியது.
இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த 1921-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வர்கீஸ் குரியன் பிறந்தார். சென்னை லயாலோக் கல்லூரியில் 1940-ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலை பட்டமும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டமும் பெற்ற குரியன் பின்னர் 1946-ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார். இத்தோடு நிற்காமல் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக்த்தில் இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்பு நிலையில் பெற்றார்.
தனது 28-வது வயதில் குஜராத் மாநில கைரா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான ஆனந்திற்கு வருகை தந்தார். கால்நடைகளை வளர்த்தல் தொழிலை நிரந்தர வாழ்வாதாரமாக்கிய கிராம மக்களை சுரண்ட ஆங்கிலேயர்கள் களமிறங்கிய பொழுது சுதந்திர இயக்கத்தின் போராட்ட வழிமுறைகளில் ஒன்றாக கருதி சர்தார் பட்டேலும், இன்னும் சிலரும் இணைந்து பால் வள விவசாயிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
1949-ஆம் ஆண்டு ஆன்ந்த் கிராமத்திற்கு வந்த வர்கீஸ் குரியன், எதுவும் யோசிக்காமல் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கெட்டுப்போன பாலை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை பழுதுபார்க்க வந்த மெக்கானிக் ஒருவர், எதிர்பாராத வகையில் தலைமைத்துவ பண்புடன் பால் வள விவசாயிகளை வழிநடத்தும் காட்சியை பின்னர் இந்திய தேசம் கண்டது. அரசுப் பணியில் சவால்களில்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஓர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவன்தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட உதவுவதாகக் கூறினார். இதுவே அமுல் பிறக்க வழி வகுத்தது. குறைந்த சம்பளத்தில் நியமிக்கப்பட்டாலும் கூட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை இந்தியாவில் மிகப்பெரிய பால் உற்பத்தி சங்கமாக மாற்றிக் காட்டினார் வர்கீஸ் குரியன்.
1950களில் 100 லிட்டர் மட்டுமே பால் உற்பத்தி என்றால் 1990களில் 90 லட்சம் லிட்டராக மாறியது அமுலின் வளர்ச்சி. இன்று 10 ஆயிரம் கோடி ரூபாய் பால் விற்பனை வருமானமும், குஜராத் மாநிலம் முழுவதும் 15 மாவட்ட யூனிட்டுகளும், 16 ஆயிரம் கிராமங்களில் 30 லட்சம் உறுப்பினர்களுடன் அமுல் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இன்று இந்தியா முழுவதும் பரவியுள்ள அமுலின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர்.
2006-ஆம் ஆண்டு குரியன், Gujarat Co-operative Milk Marketing Federation Ltd. அல்லது GCMMF இன் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுப் பெற்றார். 1973-ஆம் ஆண்டு GCMMF நிறுவப்பட்டது முதல் குரியனே தலைவராக இருந்து வந்தார்.
பால் வளம் தவிர இன்னும் பல துறைகளிலும் குரியன் தனது கவனத்தை செலுத்தினார். 1979-ஆம் ஆண்டு ஆனந்தில் நிறுவப்பட்ட இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மெண்டின் தலைவராக குரியன் நியமிக்கப்பட்டார். பிரட்டனின் இளவரசர் சார்ல்ஸ், நெதர்லாந்து இளவரசி, பிரிட்டீஷ் பிரதமராக பதவி வகித்த ஜேம்ஸ் கலிகன் ஆகியோர் ஆனந்தின் விருந்தினர்கள் ஆவர்.
இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியன் தனது 90-வது வயதில் மரணமடையும் வேளையில் 2011-ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி பால் உற்பத்தியில் உலகில் இந்தியாவின் பங்கு 17 சதவீதம் ஆகும். முன்பு இந்திய பாலை லண்டனில் ஓடு சாக்கடை நீரைவிட கேவலம் என பேசிய பிரிட்டீஷ்கார்ர்களும் இந்திய பாலுக்காக காத்திருக்கும் பொழுது வர்கீஸ் குரியன் மறக்கமுடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு மரணமடைந்துள்ளார்.
வர்கீஸ் குரியன் பெற்ற விருதுகள்;
1963 ரமன் மக்சேசே பரிசு சமூக தலைமைக்காக
1965 பத்மஸ்ரீ
1966 பத்ம பூசண்
1986 கிருஷி ரத்னா விருது (இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து)
1986 வாடேலர் அமைதிப் பரிசு (கார்னெகி நிறுவனம்)
1989 உலக உணவுப் பரிசு
1993 ஆண்டின் பன்னாட்டு மனிதர் – உலக பால்பண்ணை கண்காட்சி, மாடிசன், ஐக்கிய அமெரிக்கா
1999 பத்ம விபூசண்
2007, கரம்வீர் புரஸ்கார்
To know the latest trends & fashions like this page
https://www.facebook.com/Nilafashions
No comments:
Post a Comment