Thursday, July 25, 2013

வீட்டுத்தோட்டத்தை வளர்க்கும் கழிவுநீர்!
பெருநகரங்களில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் என்று வீட்டுக்கு அருகிலேயே வசதிகள் இருப்பதால், கழிவுநீரை வெளியேற்றுவது சுலபமான விஷயம். ஆனால், இரண்டாம்கட்ட நகர்ப்புறப்பகுதிகள் மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் வீட்டுக் கழிவுநீரைப் பராமரிப்பது... பெரும் சவால்தான்!
ஆனால், ''அந்தக் கவலையே வேண்டாம். அதையும் மிக எளிதாக மேலாண்மை செய்ய முடியும்'' என்கிறார், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி, ராமதாஸ். இவர், அரசு சாரா அமைப்பு மூலமாக... கழிவுநீர் மேலாண்மை சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
''வீடுகளில் வெளியாகும் கழிவுநீரை வீட்டுக்குள்ளேயே மறுஉபயோகம் செய்ய வேண்டும். அதை சாக்கடையில் விடக்கூடாது. ஆனால், இதைச் செய்யாததால் எவ்வளவு பிரயத்தனப்பட்டும் நம்மால் கொசுவை ஒழிக்க முடியவில்லை. மிக எளிதான முறை, குறைவான செலவிலேயே இதைச் செய்ய முடியும். வீடு கட்டும்போதே இதையும் சேர்த்துத் திட்டமிட்டால், கழிவுநீர் நமக்குத் தொல்லையாக இருக்காது'' என்று ஆர்வத்தை தூண்டும் ராமதாஸ், கழிவுநீரை மேலாண்மை செய்யும் விதங்களைப் பற்றி சொன்னார்.
''கழிவுநீரை சுத்திகரித்து, நிலத்தடி நீரை உயர்த்துவது ஒரு முறை. தாவரங்களை வளர்க்கப் பயன்படுத்திக்கொள்வது மற்றொரு முறை என தண்ணீரின் தேவை, நம்மிடம் உள்ள இடவசதி ஆகியவற்றைப் பொறுத்து... இரண்டு முறைகளில் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்ளலாம்.
நிலத்தடி நீர் உயர..!
எங்கெங்கும் தண்ணீர் பஞ்சம் விரட்டும் இந்நேரத்தில், வீட்டின் கழிவுநீரை சுத்திகரித்து நிலத்தடி நீரை உயர்த்துவது அவசியமானது. வீட்டில் வெளியாகும் கழிவுநீரின் அளவைப் பொறுத்து 3 அடிக்கு 2 அடி, அல்லது 4 அடிக்கு இரண்டரை அடி என்ற நீள, அகலத்தில், 3 அடி ஆழத்துக்கு குழி எடுத்துக் கொள்ள வேண்டும். இக்குழியின் பக்கவாட்டுப் பகுதிகளில் செப்டிக் டேங்க் கட்டுவது போல இடைவெளி விட்டுவிட்டு செங்கற்களை வைத்துக் கட்டிக் கொள்ளலாம். மண் சரிவைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. குழியின் மேல் பகுதியில், மழைநீர் குழிக்குள் சென்று விடாத அளவுக்கு ஒரு கல் உயரத்துக்கு செங்கல் வைத்துப் பூசிக்கொள்ள வேண்டும். குழியின் அடியில் தேங்காய் அளவில் உள்ள கூழாங்கற்களை முக்கால் அடி உயரத்துக்கு போட வேண்டும். அடுத்து, மாங்காய் அளவிலுள்ள கூழாங்கற்கள் முக்கால் அடி உயரத்துக்கு நிரப்ப வேண்டும். மூன்றாவது அடுக்காக, எலுமிச்சை அளவுள்ள கூழாங்கற்களை முக்கால் அடி உயரத்துக்கு நிரப்ப வேண்டும்.
வீட்டில் கழிவறை நீரைத் தவிர்த்து... குளிக்கும்போது, துவைக்கும்போது வெளியாகும் கழிவு நீர், சமையலறை கழிவுநீர் என அனைத்துக் கழிவு நீரும் இக்குழிக்குள் விழுமாறு அமைத்துவிட வேண்டும். இதில் சுத்திகரிக்கப்படும் நீர், நிலத்துக்குள் இறங்கி விடும். இதனால் நமது வீட்டைச் சுற்றி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணறு, போர்வெல் என அனைத்திலும் நீர்மட்டம் கூடிக்கொண்டே இருக்கும். இக்குழிக்குள் இருந்து துர்நாற்றம் வெளியாகாது. கொசுவும் உற்பத்தியாகாது. இது கழிவுநீரை வீட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் முறையாகும்.
thanks to Aval vikatan

Monday, July 22, 2013

மரியான் திரைவிமர்சனம் (MARYAN TAMIL MOVIE REVIEW)

அன்புள்ள நண்பர்களே,


வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனம் . ஒரு கடலும் கடல் சார்ந்த பகுதியும் மட்டும்மல்ல இந்த படம்.
அதுக்கும் மேல. ஆமாங்க மரியான் படத்தைதாங்க நாம பார்க்க போறோம். வாங்க நீந்தலாம்... இல்ல வாங்க பார்க்கலாம்.


மரியான்(தனுஷ்) கடலுக்குள்ள பாய்ஞ்சா மீனு இல்லாமா வர மாட்டாரு. அதனால ஊரே அவர கடல் ராசான்னு கொண்டாடுது.
ஒரே குடி, முரட்டுத்தனம் என்று இருக்கும் இவரை பனிமலர்(பார்வதி) உருகி, உருகி காதலிக்கிறாங்க(ஓ அதனாலதான் பனிமலர்ன்னு பேர் வச்சிருப்பாங்கலோ). ஆனா மரியான் என் மனசுல ஒண்ணும் இல்ல, அது வெத்து இடம் என்று சொல்ல. கடுப்பாகி விடுகிறார் பனிமலர். பனிமலர் நெருங்கி, நெருங்கி வர, மரியான் விலகி, விலகி ஓடுறாரு. ஒரு கட்டத்துல இவரும் காதல் வயப்படுகிறார்(பின்ன). ஊரில் இருக்கும் இன்னொரு தீக்குரசி நபருக்கும் பனிமலர் மீது காதல் வருகிறது(வில்லன் இல்லாம படமா?). மரியானும், பனிமலரும் காதல் செய்வது தெரிந்ததும் வீட்டுக்கு போய் பொண்ணு கேட்கிறார். பனிமலரின் தந்தை மறுக்க, அங்கே சண்டை வருகிறது. எங்கிட்ட வாங்கி இருக்கிற கடன கட்டு இல்லன்ன உம்பொண்ண எனக்கு கட்டுங்கிறாரு. 

பல முறை மரியானை வெளிநாட்டிற்க்கு அனுப்ப முயற்சிக்கிறார் தாய். ஆனால் மரியானோ நான் கடல் ராசா, இந்த உப்பு காற்று விட்டுட்டு நான் எங்கேயும் போக முடியாது என்று சொல்லி விடுகிறார். ஆனால் காதலியின் கடனை அடைக்க இரண்டு வரும் சூடானுக்கு போகிறார். போனிலே உருகுகிறார்கள். ஊருக்கு திரும்பும் நாளில் எதிர்பாராத விதமாக சூடான் நாட்டு தீவிரவாதிகள் , இவர்களை கடத்தி விடுகிறார்கள். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பினாரா? பனிமலருடன் இணைந்தாரா ? இதுவே மரியான் படங்க.


தனுஷ் இயல்பாக நடித்து அசத்துகிறார். அங்கங்கு சில நடிகளையும் நினைவு படுத்துகிறார். படத்தை ஆரம்பிக்கும் பொழுது குடி, குடியை கெடுக்கும் என்று நல்ல விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் படம் முழுக்க குடிப்பது போல் நிறைய காட்சிகள். இதை தவிர்த்திருக்கலாம். தனுஷின் நண்பனாக அப்புக்குட்டி இருக்கிறார். இவரை இலங்கை இராணுவம் கொன்று விட்டதாக கூறி இவர் கதையை முடித்து விடுகிறார்கள்.
அந்த காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. செயற்க்கையாக இருக்கிறது. இவர் இறந்து விட்ட சமயத்தில் இவர் அழுது கொண்டிருக்கிறார். அப்பொழுது போய் பார்வதி பெண்பார்க்க வருவதாக சொல்லி அழுகிறாள். ஆத்திரத்தில் இடுப்பில் எட்டி உதைக்கிறார். நமக்கே ஒரு நிமிஷம் நடுங்கி விடுகிறது. இந்த மாதிரி காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். உதைப்பது நல்ல விஷயம் போல காட்டி இருக்கிறார்கள். குட்டி ரேவதி அசோசியேட் டைரக்டராக இருக்கிறார். இவர் பெண்களை அடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

பார்வதி , பூ படத்தில் நடித்தவர். இதில் அனைத்து காட்சியிலும் மையிட்ட கண்களோடு வந்து பனி மாதிரி உருக வைக்கிறார்.
நன்றாக அடி வாங்குகிறார். கொஞ்சம் பாவமாகக் கூட இருக்கிறது.


இசை A R ரஹ்மான். பல இடங்களில் நமக்கு கடல் படத்தை நினைவு படுத்துகிறது. கொஞ்சம் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். நெஞ்சே எழு பாடல் இன்னொரு வந்தே மாதரம். எங்க போன ராசா, இன்னும் கொஞ்சம் பாடல்கள் இனிமை.


ஒளிப்பதிவு மிக அருமை. கடல் பகுதியின் அழகை நம் கண் முன்னே காட்டுகிறது.சாதிக்கிற பய அத்தன பேருக்கும் பொம்பள வாட பட்டுகிட்டே இருக்கணும் போன்ற சில வசனங்கள் புதிதாக இருக்கிறது.


பரத்பாலா இயக்கி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக் கெட்டிருக்கலாம். பெண்களின் ரோல்கள் என்று மாறப் போகின்றனவோ தெரியவில்லை? எப்பொழுது பார்த்தாலும் உம் புள்ளைய நான் சுமக்கணும், நீ எனக்குதாண்டா.......போன்ற வசனங்கள்.சூடானே வருமையான நாடு, அங்கே போய் என்ன சம்பாதிப்பது அது கொஞ்சம் உதைக்கிறது. இது 2008ல் நடந்த ஒரு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது.


மரியான் என்றால் சாவே இல்லாதவன் என்று பொருளாம். நினைக்காதது வேனா நடக்காம இருக்கலாம். ஆனால் நினைக்கிறது கண்டிப்பா நடந்தே தீரும் என்று சொல்லும் நேர்மறையான வசனம் நன்றாக இருக்கிறது.

Directed byBharat Bala
Produced byVenu Ravichandran
Written byBharat Bala
Screenplay byBharat Bala
Sriram Rajan
StarringDhanush
Parvathi Menon
Salim Kumar
Music byA. R. Rahman
CinematographyMarc Koninckx
Editing byVivek Harshan



சில படம் முடிவதே தெரியாது. சில படம் எப்பொழுது முடியும் என்று இருக்கும்.
நீங்க படத்த பார்த்துட்டு சொல்லுங்களேன். இது எந்த மாதிரின்னு.


மீண்டும் சந்திப்போமா?


வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!

Thursday, July 18, 2013

ஏழு விஷயங்கள்

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்:

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும்
... மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்தி;லும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்:

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்:

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக
சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக
வரரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க
முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்:

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

# வாழ்தல் இனிது, வாழ்வை நேசி...
(Thanks to Inioru vidhi seyvom)

Wednesday, July 17, 2013

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்

பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்:-

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்

பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்

1. இருமுறை பல் துலக்குதல்

நிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப்படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்துவிடுங்கள். அதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளைச் சொன்னால், அவர்களே தினமும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்களை தேடி வருவார்கள்.

2. அடித்து எழுப்ப வேண்டாம்

நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். உண்மையில் அவ்வாறு எழுப்புவது நல்ல பழக்கமல்ல. சொல்லப்போனால் அது அவர்களது உடலுக்கு கெட்டதைத் தான் விளைவிக்கும். எப்படியெனில், சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.

3. சாப்பிடும் பழக்கம்

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

4. சுத்தம் செய்தல்

குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.

5. மரியாதை

குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

6. பகிர்ந்து கொள்ளுதல்

பகிர்ந்து கொள்வது என்பது ஒருவிதமான சந்தோஷம். ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் இதனை செய்வதில்லை. மேலும் தற்போதைய பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்களுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொடக்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

7. பொறுப்பு

சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.

8. ஆரோக்கிய உணவுகள்

தற்போதுள்ள குழந்தைகளுக்கு பிட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறுவயதிலேயே வாங்கிக் கொடுத்து பழக்கிவிட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற்காலத்தில் ஆரோக்கியமற்ற உடலைப் பெற்றிருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.

9. அளவான டிவி, அதிகமான விளையாட்டு

குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.

10. நல்ல பழக்கம்

பொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழுது கண்டித்து, அதனை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டுவார்கள்.

11. உதவி

சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால், நீங்கள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத்து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம்.

12. சரியான படுக்கை நேரம்

குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்கள்.

Tuesday, July 16, 2013

உரமாகுது காய்கறி கழிவு... மிச்சமாகுது தினசரி செலவு!


'வீட்டுத் தோட்டம் போட வேண்டும்' என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், 'அதெல்லாம் லேசுப்பட்ட விஷயமில்ல...', 'அதையெல்லாம் நம்மளால பராமரிக்க முடியுமா?' இதுபோன்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடை தேடாமலே... விஷயத்தை முடித்துவிடுவார்கள்.
ஆனால், 'நகரத்தில் இருந்தால் என்ன..? நாமும் அமைக்கலாம் ஒரு குட்டித் தோட்டம். தேவை ஆர்வமும் முயற்சியும் மட்டுமே!’ என்று நம்பிக்கையூட்டுகிறார், சுற்றுச்சூழல் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில். சென்னைப் புதுக்கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர், மண்புழு விஞ்ஞானி என்கிற பெருமைகளைப் பெற்றிருக்கும் இஸ்மாயில்... மண்புழு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி உரையாற்ற, பயற்சி அளிக்க உலக அளவில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர். இங்கே வீட்டில் தோட்டம் அமைப்பது முதல், பராமரிப்பது வரை மணிமணியான தகவல்களைப் பகிர்கிறார்.
''பெரிய பெரிய கட்டடங்களில், துளிகூட மண் இல்லாத நிலையிலும், கிடைக்கும் சின்னச் சின்ன வெடிப்புகளில் அரச மரம் வளர்வதைப் பார்த்திருப்போம். அப்படியிருக்கும்போது காய்கறி மற்றும் பூஞ்செடிகள் வளர்க்க அதிகபட்சமாக எவ்வளவு மண் தேவைப்படப் போகிறது? பிடியளவு மண்ணில்கூட கொத்துக் கொத்தாக காய்கள் பறிக்கலாம். நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டப்பாக்கள், வாட்டர் பாட்டில்கள், பெயின்ட் வாளிகள் இவற்றில் எல்லாம் கொஞ்சம் மண்ணும் இயற்கை உரமும் போட்டால் போதும்... அதிலிருந்து உருவாகும் அழகான தோட்டம்!
முதல் தேவை... எரு!
தோட்டம் போடுவதற்கு முன், முதலில் எரு தயாரிக்க வேண்டும். முதல் வேலையாக ஏழு தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தொட்டியிலும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என எழுதுங்கள். சமையலுக்கு நறுக்கும் காய்கறிக் கழிவுகளை அன்றைய தினத்துக்குரிய தொட்டியில் போடுங்கள்.
அதை மக்க வைப்பதற்கு, சிறிதளவு மண்ணைத் தூவுங்கள் அல்லது புளித்த தயிரை, தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். இதேபோல அந்தந்த நாளுக்குரிய தொட்டிகளில் கழிவுகளைப் போட்டு வாருங்கள். நான்கு முதல் ஏழு மாதத்துக்குள் இந்தக் கழிவு சேகரிப்பு... எருவாக மாறிவிடும்.
இப்போது நமக்கு ஏழு தொட்டிகளில் உரம் ரெடி (ஒரு தொட்டிக்கான கழிவுகளை ஒரே நாளில் உங்களால் போட முடிந்தால்... நான்கு முதல் ஆறு வாரங்களில் உரம் தயாராகிவிடும்)!
அப்புறம் என்ன... கொஞ்சம் மண்ணைத் தூவி வீட்டிலிருக்கும் அழுகியத் தக்காளியைப் பிழிந்தால்... தக்காளிச் செடி முளைக்கும், வெந்தயத்தைப் போட்டால் வெந்தயக்கீரை முளைக்கும். சந்தையில் விற்பனையாகும் விதவிதமான காய்கறி விதைகளைத் தூவியும் பயிர் செய்யலாம். கூடவே இன்னொரு ஏழு தொட்டிகள் வாங்கி மீண்டும் உரம் தயாரிக்க ஆரம்பித்துவிடுங்கள்.
தண்ணீரை சேமிக்கும் தேங்காய் நார்!
வீட்டுக் கழிவை உரமாக்கிவிட்டோம். அடுத்தது, தண்ணீர். பெருகி வரும் தண்ணீர் பஞ்சத்தில் குடிக்கவே தண்ணீர் இல்லை, இதில் செடிக்கு ஏது நீர் என்கிறீர்களா..? வழி செய்வோம். தேங்காய் நார் ஒரு மிகச் சிறந்த தண்ணீர் தேக்கி. நாம் ஊற்றும் தண்ணீரை இரண்டு, மூன்று நாட்கள் வரையிலும்கூட தேக்கி வைத்துக்கொள்ளும்.
அதனால் தொட்டியில் மண்ணுடன் தேங்காய் நாரையும் சேர்த்தால் செடிக்கு விடும் தண்ணீர் மிகக்குறைந்த அளவே தேவைப்படும். தொட்டிக்கு அடியில் துளை போட்டு வைப்பது, அதிகப்படியான நீரை வெளியேற்றி செடி அழுகாமல் காக்கும்.
நீங்களே தயாரிக்கலாம் பூச்சிவிரட்டி!
'அட என்னங்க நீங்க? உரம், தண்ணீர் இதைவிட பெரிய பிரச்னை... பூச்சிதாங்க. அதனால, குழந்தைங்க இருக்குற வீட்டுல தோட்டம் வைக்கவே பயமா இருக்கு?' என்று தயங்குபவரா நீங்கள்? கவலையே வேண்டாம். பூச்சிகளையும் ஓடஓட விரட்டி விடலாம். அதற்காக நிறைய பணம் கொடுத்து அபாயம் நிறைந்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை வாங்கவே கூடாது. இயற்கை முறை பூச்சிவிரட்டிகளை நாமே தயாரிக்கலாம்.
100 கிராம் இஞ்சி, 100 கிராம் பூண்டு, 10 கிராம் பெருங்காயம்... இவை மூன்றையும் அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் 15 நாட்கள் ஊற வையுங்கள். பசுவின் கோமியம் கிடைத்தால்... 1 லிட்டர் கோமியத்துடன் 9 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள். இதுதான் பூச்சிவிரட்டி. இதை, 9 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்கிற விகிதத்தில் கலந்து தெளியுங்கள். அளவுக்கு அதிகமாக தெளிப்பதும் ஆபத்து. அது, செடியையே கருக வைத்துவிடும். தோட்டத்துக்கு நடுவில் சாமந்திப்பூ செடியை வைத்தாலும் பூச்சிகள் நெருங்காது.
பராமரிப்பு ரொம்ப முக்கியம்!
பூந்தொட்டிகளுக்கு அடியில் பிளாஸ்டிக் ட்ரே வைப்பதன் மூலம் உபரி நீர் சிந்தி தரை அழுக்காவதை தவிர்க்கலாம். மழைக் காலங்களில் வானம் பார்த்தவாறு பூந்தொட்டிகளை வைக்க வேண்டாம். கொல்லைப்புற தோட்டங்களில் சேரும் சருகுகள், தேவையற்ற தழைகளைத் திரட்டி, அவற்றையும் உரம் தயாரிக்கப் பயன்படுத்துங்கள். வீட்டின் பின்புறம் குழி எடுக்க வசதியுள்ளவர்கள் குழிக்குள் இவற்றை போட்டுக் கொண்டே வந்து உரமாக்கலாம். அப்படி வசதியில்லாதவர்கள் பெரிய டிரம்களில் கொட்டி ஒவ்வொரு தரமும் அதன் மீது மண்ணைப் போட்டு மூடிக்கொண்டே வருவதுடன் அடிக்கடி அதை குச்சியால் கிளறி மக்க வைத்தும் உரம் தயாரிக்கலாம்'' என்ற இஸ்மாயில்,
''வீட்டுத் தோட்டம் என்றாலே பூச்சிகள் உள்ளிட்டவை வரும் என்கிற பயம் தேவையில்லை. தோட்டத்தில் குப்பைகளை சேரவிடாமல் சுத்தமாக வைத்திருந்தாலே போதும்'' என்று வழிகாட்டினார்!
என்ன... இனி, உங்கள் வீட்டில் மல்லிகை மணக்கும்... ரோஜாப்பூ கண் சிமிட்டும்... வெண்டைக்காய், பரங்கிக்காய் பளீரிடும்... சரிதானே!
(Thanks to Vikatan)

Monday, July 08, 2013

தோனி போல வருமா?

மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர்

இளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் !கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்படடதால் தோனியை கீபிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம் .

இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டு இருந்தார் .டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும் இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக குறிப்பார்.
அப்பா உடற்பயிற்சி வகுப்புகளுக்கு போக சொன்னால் கடுக்காய் கொடுத்து விட்டு நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவார் .இப்பொழுதும் ஒரு லிட்டர் பாலை மில்க் ஷேக் அல்லது சாக்லேட் சுவையில் குழந்தை போல விரும்பி சாப்பிடுவார்

இளம் வயதில் பீகார் அணியில் ஆடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது பல போட்டிகளில் ஒற்றை ஆளாக டோனி சதம் அடிக்க அணி தோற்றுக்கொண்டு இருந்தது.அதனால் பெரும்பாலும் தோனியால் இந்தியா அணிக்குள் நுழைய முடியவில்லை.அந்த தருணத்தில் இந்தியா அளவில் இளம் திறமைகளை கண்டறியும் வேலையை பி.சி.சி.ஐ செய்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு தோனி இந்தியா ஏ அணிக்காக ஆடி கென்யா ஜிம்பாப்வே அணிகளோடு சதம் அடித்தது அப்போதைய கேப்டன் கங்குலி கண்ணில் பட்டது திருப்புமுனை.வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார்.ரன் சேர்க்காமல் ரன் அவுட் ஆனார்.

எனினும் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வைப்பிகுகள் தந்தார் கங்குலி.பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் 148
அடித்து கவனம் பெற்றார்.இலங்கையுடன் ஆன போட்டியில் செஸ் செய்கிற பொழுது 183 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்சம் என்கிற உலக சாதனையை செய்தார். அதற்கு பின் ஐயர்லாந்து தொடரில் இந்தியா அணியின் துணைக்கேப்டன் ஆனார்.ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பைக்கு இந்தியா அணியின் தலைவர் ஆனார். அப்பொழுது அதிரடியான மற்றும் வித்தியாசமான முடிவுகளால் கோப்பையை பெற்றுத்தந்தார்

வாழ்வின் உச்சபட்ச நிகழ்வு நடந்தது ஏப்ரல் இரண்டு 2011 அன்று. சச்சினின் இறுதி உலகக்கோப்பை என அனைவரும் சொன்ன இறுதிப்போட்டியில் அணி மூன்று விக்கெட் இழந்து திணறிக்கொண்டு இருந்த பொழுது அது வரை தொடரில் அரை சத்தம் கூட அடிக்காத தோனி களம் இறங்கி ஆடி தொண்ணுற்றி ஒரு ரன்கள் அடித்தார். அப்பொழுது சச்சின் நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் தலை சிறந்தவர் என புகழ்ந்தார்

உலகக்கோப்பை வென்றதும் தோனி சொன்ன ஒரு உண்மை சம்பவம். 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் பொழுது தோனி டிக்கெட் கலெக்டர் ஆக கரக்பூரில் வேலை பார்த்து வந்தார் ! அப்பொழுது அடிக்கடி ஸ்கோர் கேட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து ஆமாம். இவர் உலகக்கோப்பையை ஜெயிக்க போறார் என நக்கலாக ஒரு பிரயாணி அடித்த கமென்ட் தான் மிக சாதாரணம் ஆன என்னை இவ்வளவு தூரம் உத்வேகப்படுதி உள்ளது என்பார் தோனி

லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும்;சச்சின் மற்றும் கில்க்ரிஸ்ட் பிடித்த விளையாட்டு வீரர்கள். வீடியோ கேம் வெறியர். கவுன்ட்டர் ஸ்ட்ரைக் பிடித்த வீடியோ கேம். புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். ஹர்லி டேவிட்சன் பைக்குகள் எல்லாமும் அவரிடம் உண்டு .

ஆடுகளத்தில் கோபப்பட்டு தோனியை பார்க்க முடியாது. எவ்வாளவு சிக்கலான நிலையிலும் தோனி அவ்வளவு அழகாக புன்னகைப்பார். இளம் வயதில் வீட்டில் அம்மா உணவு தயாரிக்க வறுமையால் நேரம் அதிகம் ஆகும்.அப்பொழுதில் இருந்து இந்த பொறுமை உடன் இருக்கிறது என சிம்பிளாக சொல்வார்

ஜார்கண்ட் அரசாங்கம் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க ஸ்கூல் செல்வோம் நாம் என்கிற விளம்பரத்தில் தோனியை நடிக்கக் கூப்பிட்ட பொழுது ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்

தோனி உச்சபட்ச தன்னம்பிக்கை காரர். உலககோப்பையை வென்றதும் உங்கள் அடுத்த இலக்கு என்ன என கேட்டதும் ,"ஐ.பி.எல் சாம்பியன்ஸ் லீக் .,இரண்டு உலகக்கோப்பை ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை வெல்ல வேண்டும் .முடியாதா என்ன ?"என்றார் .அது தான் தோனி.

நன்றி : பூ.கொ. சரவணன்

(Thanks to Tamil karuthukalam)