வீட்டுத்தோட்டத்தை வளர்க்கும் கழிவுநீர்!
பெருநகரங்களில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் என்று வீட்டுக்கு அருகிலேயே வசதிகள் இருப்பதால், கழிவுநீரை வெளியேற்றுவது சுலபமான விஷயம். ஆனால், இரண்டாம்கட்ட நகர்ப்புறப்பகுதிகள் மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் வீட்டுக் கழிவுநீரைப் பராமரிப்பது... பெரும் சவால்தான்!
ஆனால், ''அந்தக் கவலையே வேண்டாம். அதையும் மிக எளிதாக மேலாண்மை செய்ய முடியும்'' என்கிறார், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி, ராமதாஸ். இவர், அரசு சாரா அமைப்பு மூலமாக... கழிவுநீர் மேலாண்மை சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
''வீடுகளில் வெளியாகும் கழிவுநீரை வீட்டுக்குள்ளேயே மறுஉபயோகம் செய்ய வேண்டும். அதை சாக்கடையில் விடக்கூடாது. ஆனால், இதைச் செய்யாததால் எவ்வளவு பிரயத்தனப்பட்டும் நம்மால் கொசுவை ஒழிக்க முடியவில்லை. மிக எளிதான முறை, குறைவான செலவிலேயே இதைச் செய்ய முடியும். வீடு கட்டும்போதே இதையும் சேர்த்துத் திட்டமிட்டால், கழிவுநீர் நமக்குத் தொல்லையாக இருக்காது'' என்று ஆர்வத்தை தூண்டும் ராமதாஸ், கழிவுநீரை மேலாண்மை செய்யும் விதங்களைப் பற்றி சொன்னார்.
''கழிவுநீரை சுத்திகரித்து, நிலத்தடி நீரை உயர்த்துவது ஒரு முறை. தாவரங்களை வளர்க்கப் பயன்படுத்திக்கொள்வது மற்றொரு முறை என தண்ணீரின் தேவை, நம்மிடம் உள்ள இடவசதி ஆகியவற்றைப் பொறுத்து... இரண்டு முறைகளில் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்ளலாம்.
நிலத்தடி நீர் உயர..!
எங்கெங்கும் தண்ணீர் பஞ்சம் விரட்டும் இந்நேரத்தில், வீட்டின் கழிவுநீரை சுத்திகரித்து நிலத்தடி நீரை உயர்த்துவது அவசியமானது. வீட்டில் வெளியாகும் கழிவுநீரின் அளவைப் பொறுத்து 3 அடிக்கு 2 அடி, அல்லது 4 அடிக்கு இரண்டரை அடி என்ற நீள, அகலத்தில், 3 அடி ஆழத்துக்கு குழி எடுத்துக் கொள்ள வேண்டும். இக்குழியின் பக்கவாட்டுப் பகுதிகளில் செப்டிக் டேங்க் கட்டுவது போல இடைவெளி விட்டுவிட்டு செங்கற்களை வைத்துக் கட்டிக் கொள்ளலாம். மண் சரிவைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. குழியின் மேல் பகுதியில், மழைநீர் குழிக்குள் சென்று விடாத அளவுக்கு ஒரு கல் உயரத்துக்கு செங்கல் வைத்துப் பூசிக்கொள்ள வேண்டும். குழியின் அடியில் தேங்காய் அளவில் உள்ள கூழாங்கற்களை முக்கால் அடி உயரத்துக்கு போட வேண்டும். அடுத்து, மாங்காய் அளவிலுள்ள கூழாங்கற்கள் முக்கால் அடி உயரத்துக்கு நிரப்ப வேண்டும். மூன்றாவது அடுக்காக, எலுமிச்சை அளவுள்ள கூழாங்கற்களை முக்கால் அடி உயரத்துக்கு நிரப்ப வேண்டும்.
வீட்டில் கழிவறை நீரைத் தவிர்த்து... குளிக்கும்போது, துவைக்கும்போது வெளியாகும் கழிவு நீர், சமையலறை கழிவுநீர் என அனைத்துக் கழிவு நீரும் இக்குழிக்குள் விழுமாறு அமைத்துவிட வேண்டும். இதில் சுத்திகரிக்கப்படும் நீர், நிலத்துக்குள் இறங்கி விடும். இதனால் நமது வீட்டைச் சுற்றி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணறு, போர்வெல் என அனைத்திலும் நீர்மட்டம் கூடிக்கொண்டே இருக்கும். இக்குழிக்குள் இருந்து துர்நாற்றம் வெளியாகாது. கொசுவும் உற்பத்தியாகாது. இது கழிவுநீரை வீட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் முறையாகும்.
thanks to Aval vikatan
No comments:
Post a Comment