Friday, October 04, 2013

ராஜா ராணி திரைவிமர்சனம்


அன்புள்ள நண்பர்களே,

    வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சில திரைப்படங்கள் வருவதற்க்கு முன்பே மிக மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். ஏனெனில் நமது தொலைக்காட்சிகளில் வரும் திரைப்படங்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய கிசுகிசுக்கள் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஒரு திரைப்படம்தான் ராஜா ராணி.
வாங்க படத்தை பார்க்கலாம்.

  நான்கு பேர் மூன்று காதல் இதுதாங்க ராஜா ராணி. ரெஜினா (நயன்தாரா) வும் ஜான்(ஆர்யா) வும் திருமணமாகும் காட்சியில் ஆரம்பிக்கிறது திரைப்படம். இருவருக்கும் பிடிக்காமல் நடக்கிறது திருமணம். இதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஜான் தினமும் குடித்து விட்டு வருவது ரெஜினாவிற்க்கு பிடிப்பதில்லை. மனவருத்தும் ஏற்படும் பொழுது ரெஜினாவிற்க்கு வலிப்பு நோய் வருகிறது. இவரை மருத்துவமனையில் சேர்க்கும் பொழுது மருத்துவர் கேட்கும் எந்த கேள்விக்கும் ஜானிற்க்கு பதில் தெரிவதில்லை. அதனால் மருத்துவர் இவருக்கு அறிவுரை கூறி விட்டு செல்கிறார். அதற்க்காக முதன் முறையாக ரெஜினாவிடும் பேசும் ஜான் மருத்துவருக்காகவாவது இந்த நோய் வந்த விவரங்களைக் கேட்கிறார். முன்கதையைக் கேட்ட ஜானிற்க்கு ரெஜினா மீது ஈடுபாடு வருகிறது. இதேப் போல் ஜானிற்க்கும் ஒரு முன்கதை இருக்கிறது. இதைக் கேட்ட பிறகு ரெஜினாவிற்க்கு ஜானின் மீது காதல் வந்து இருவரும் வாழ்வில் இணைந்தார்களா என்பதே ராஜா ராணி :)

  ஒரு மனிதனின் வாழ்வில் காதல் முக்கியமானதுதான். ஆனால் கிடைக்காத காதலுக்காக வாழ்வே சூனியமாகி விடாது என்பதே
ராணி சொல்லும் ராஜாவின் கதை, ராஜா சொல்லும் ராணியின் கதை.

  நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு தலை காட்டி இருக்கும் படம் தான் இது. நடிப்பில் மிளிருகிறார். வலிப்பு வரும் காட்சியிலும், காதலனை பிரிந்த காட்சியிலும் சபாஷ் வாங்குகிறார்.

  ஜெய்யின் அப்பாவித்தனமான நடிப்பு நமக்கு புதியதில்லை. ஆனாலும் அவரின் அப்பாவித்தனமான முகமும், நண்பர்கள் மிரட்டும் பொழுது அழுவதும் மிகவும் ரசிக்கும் காட்சி. முன்பகுதியில் குழந்தைத்தனம், பின்பகுதியில் மிடுக்கு ரசிக்கும்படி உள்ளது.

  வழக்கமாக துடிப்போடும், துடுக்கோடும் நடிக்கும் ஆர்யா இதிலும் சளைக்க வில்லை. நயனின் அன்புக்கு ஏங்கும் காட்சியிலும், நஸ்ரியாவை துரத்தி துரத்தி காதல் செய்யும் பொழுதும் இன்னொரு காதல் மன்னன்.

  நஸ்ரியா அழகு பதுமையாக வந்து அனைவரையும் கொள்ளை கொள்கிறார். தன்னைப் பற்றி சொல்லி, பாசத்திற்க்காக ஏங்கி
"எங்க அம்மா மடியில படுத்ததே இல்ல, உன் மடியில படுத்துக்கட்டுமா" என்று கேட்கும் பொழுது நமக்கும் அந்த பாசத்தின் தவிப்பு தெரிகிறது. பிரதர், பிரதர் என்று சொல்லும் காட்சி ரசிக்கும் படி உள்ளது முதலில், பின்பு அதுவே முகம் சுளிக்க வைக்கிறது.



 சந்தானம் நகைச்சுவை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. சத்யாராஜ் சில காட்சிகளில் நடித்தாலும், அப்பா,மகளின் நெருக்கத்தை சொல்லுகிறார்.

இயக்குநர் அட்லி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.கதைக்காக செலவிட்ட நேரத்தை விட பீருக்காக அதிகம் செலவிட்டிருக்கிறார். அதிகமாக அனைவரையும் அழ வைத்திருக்கிறார் (கிளிசரின் செலவும் அதிகம்)

 சில வசனங்கள் ரசிக்கும் படி இருக்கிறது. "கல்யாணத்திற்க்கு முன்னாடி ஒருத்தன் குடிக்கிறான் என்றால் லவ் பெயிலியர், அதுவே கல்யாணத்திற்க்கு பின்னாடி ஒருத்தன் குடிக்கிறான்னா வாழ்க்கையே பெயிலியர்", "நம்ம கூட இருக்கறவங்க நம்மல விட்டு போயிட்டாங்கன்னா, நாமளும் கூடவே போகனும்ன்னு அர்த்தம் இல்ல. என்னைக்காவது ஒரு நாள் நாம ஆசப்பட்ட மாதிரி நம்ம லைப் ஒரு நாள் மாறும்"

 இசை ஜிவி பிரகாஷ், பின்னணி இசை ரசிப்பு, பாடல்களும் ஏற்புடையதாக இருக்கிறது.

 மொத்தத்தில் ராஜா ராணி அரியணை ஏறலாம்.

நீங்களும் படம் பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்களேன். மீண்டும் சந்திப்போமா?

வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!