Sunday, November 30, 2014

காவியத்தலைவன் திரைவிமர்சனம் (Kaviyaththalaivan tamil movie review in Tamil)

அன்புள்ள தோழமைகளே!!
     வணக்கம். மீண்டும் ஒரு படத்தோடு உங்களை நான் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட இடைவெளிக்கு பின்பு உங்களை சந்திக்கிறேன். மிகுந்த எதிர்பார்ப்போடு, மிக வித்தியாசமான கதையோடு வந்திருக்கும் படம்தான் "காவியத்தலைவன்"

  அது ஒரு நாடக நிறுவனம். அந்த நாடக நிறுவனத்தை நடத்தும் குரு தவத்திரு சிவதாஸ் சுவாமிகள்(நாசர்). சிறு வயது முதலே அவரிடம் நேரடி சிஷ்யர்களாகிறார்கள் கோமதி நாயகம் பிள்ளை( பிரிதிவிராஜ்) மற்றும் காளியப்ப பாகவதர்(சித்தார்த்). இருவருக்கும் இடையே அண்ணன், தம்பி போன்ற பாசம் இருக்கிறது. அதோடு கலையின் மேல் வற்றாத காதலும் இருக்கிறது. நல்ல உழைப்பாளி மற்றும் திறமை இருந்தும் தன் குருவிடம் நல்ல பெயர் எடுக்க முடிவதில்லை கோமதி நாயகத்தால். ஆனால் தன் திறமை மற்றும் மாற்றி யோசிக்கும் வித்தையை வைத்து அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடிக்கிறார் காளியப்பா. இதனால் கோமதி நாயகத்திற்க்கு உள்ளுக்குள்ளேயே ஒரு பகை உணர்வு வந்து விடுகிறது. நாடகம் பார்க்க வரும் ரங்கம்மாள் இளவரசி மீது காதல் கொள்கிறார் காளியப்பா. இரவில் திருட்டுத்தனமாக சென்று இளவரசியை பார்த்து வருகிறார். இவரின் மேல் இருந்த முன் பகையை வைத்து இவரின் குருவிடம் இவரின் திருட்டுத்தனத்தை சொல்லி அவரை இனிமேல் நடிக்க முடியாதபடியும், அந்த பெண்ணை பார்க்கவும் முடியாதபடியும் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்கள். இவர்களின் நாடகத்தில் ஆண்கள் மட்டும் இருக்க, அனாதைகளாக ஒரு தாயும், மகளும் அடைக்கலம் ஆகிறார்கள். வடிவு (வேதிகா) மகளுக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருக்க, வடிவையும் நாடகத்தில் சேர்க்க முடிவாகிறது. பார்த்ததுமே கோமதி நாயகம் காதலில் விழ, நாயகியோ காளியப்பா மேல் காதல் கொள்கிறார். இதனால் கோமதி நாயகத்தின் பகை உணர்வு அதிகமாகிறது.
   இதற்க்கு நடுவில் இளவரசி வயிற்று பிள்ளையோடு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வற, குடித்து விட்டு தன் குரு என்றும் பாராமல் காளியப்பா கண்டபடி பேசி விடுகிறார். இதனால் மரணப் படுக்கையில் விழும் குரு இறந்து விடுகிறார். இதன் பிறகு நாடக நிறுவனத்தை தான் எடுத்து நடத்துவதாக முடிவு செய்யும் கோமதி நாயகம், இனி தன் கூட்டத்தில் காளியப்பா இருக்க கூடாதென்று சொல்லி விடுகிறார். நாடகத்தை திறம்பட நடத்தி வெளி நாடுகளூக்கெள்ளாம் சென்று வருகிறான் கோமதி. இதற்க்குள் நாடெங்கும் சுதந்திர தாகம் அதிகரித்திருக்கிறது. நாடு திரும்பும் போது எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கிறது. அவை என்ன? நாடக கூட்டத்தைப் பிறிந்து காளியப்பா என்ன ஆனான்?, வடிவும், கோமதி நாயகமும் திருமணம் செய்து கொண்டார்களா? வடிவு காத்திருந்தாளா? காளியப்பாவின் சுதந்திர தாகம் என்ன ஆனது? இவையெல்லாம்தான் மீதிக் கதை.

  இந்த படத்தை இயக்கி இருப்பது வசந்த பாலன் அவர்கள். ஒரு வித்தியாசமான முயற்ச்சி. இந்த கதை சுதந்திரத்திற்க்கு முன்பு இருந்த காலத்தை ஒட்டி எடுக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. எடுத்திருக்கும் முறை, சுதந்திர தாகம், அந்த வேகம் அனைத்தும் ருசி. எந்த கருத்தும் இல்லாத, ஒரு பொழுது போக்கு படம்.



  சித்தார்த், ஒரு துடிப்பான, கலகலப்பான நடிகனாக வந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அசத்துகிறார். இளவரசியிடம் காதல் கொள்வதாகட்டும், வடிவிடம் காதலை மறுப்பதாகட்டும், பிரிதிவிடம் தன் பாசத்தை அண்ணே என்று சொல்வதாகட்டும், குருவிடம் தன் கோபத்தை கொட்டுவதாகட்டும், மிகப்பெரிய சபாஷ் வாங்குகிறார்.

  பிரிதிவிராஜ் நடிகனாக தன் திறமையை காட்டும் பொழுதும், தன் பகை உணர்வை காட்டும் பொழுட்தும், தன் பழிவாங்கும் படலத்தை செய்யும் பொழுதும் தன் முத்திரையை பதிக்கிறார்.

 இரண்டு நாயகிகளும் தங்கள் பங்கினை குறைவின்றி செய்தாலும், வேதிகா நம் கண்களை நிறைக்கிறார்.



இதைத்தவிர நாசர், தம்பி ராமைய்யா, குயிலி, மன்சூர் அலிகான், பொன் வண்ணன் மற்றும் சிங்கம்புலி போன்றவர்கள் தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இசை A R ரஹ்மான் அவர்கள். நிறைய பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாரு இருக்கிறது. காதிற்க்கும் நிறைவு தருகிறது. குறிப்பாக வாங்க மக்கா, ஏய் மிஸ்டர், யாருமில்லா தனிமையில் போன்றவை இனிமை. ஒரு சில பாடல்கள் எங்கேயே கேட்ட உணர்வையும் ஏற்படுத்த தவறவில்லை.

மொத்தத்தில் காவியத்தலைவன் , நிஜத்திலும் ஜெயிக்கிறார்.

மொத்த குழுவிற்க்கும் வாழ்த்துக்கள்!!!

மீண்டும் சந்திப்போமா?

வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!!

Saturday, November 29, 2014