Wednesday, December 24, 2014

Merry Christmas :)

http://www.christmasnewyearwallpapers.com/wp-content/uploads/2014/12/Merry-Christmas-Greeting-Card-3.jpg
வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்
.......
நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை எங்கே தெரியவில்லை
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது

வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்கச் சொன்னது


இரயில் சிநேகம் என்ற சீரியல் பாடலில் இருந்து சில வரிகள்.

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திபோம்.

Sunday, December 14, 2014

லிங்கா திரைவிமர்சனம் (Linga Tamil movie review)


அன்புள்ள நண்பர்களே!!!

     வணக்கம். நலம்தானே?  மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தோடு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஒரு சில நடிகர்களின் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தும் ரசிகர்கள் மத்தியில். அப்படியொரு நடிகரின் படம்தான் நாம் பார்க்க இருப்பது. என்ன நண்பர்களே கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம்!! நீங்கள் நினைப்பது போல் லிங்கா தாங்க நாம் பார்க்க போவது. வாங்க பார்க்கலாம்.

   சோலையூர் கிராமத்தில் உள்ள ஒரு அணையில் பழுது இருப்பதாக அந்த ஊரை சேர்ந்த எம்பி(MP) நாகபூஷன் (ஜகபதி பாபு) அரசுக்கு சொல்கிறார். ஆனால் அதை விசாரிக்க வரும் அரசு அதிகாரி அணையில் எந்த பழுதும் இல்லையென்றும் இன்னும் ஆயிரம் வருடம் நன்றாக இருக்கும் என்றும் எழுதி வைத்து விடுகிறார்.அதை மாத்தி எழுத சொல்லி, கேட்காமல் போக அவரை கொலை செய்து விடுகிறார் ஜகபதி பாபு. இறக்கும் தருவாயில் ஊர் தலைவரான விஸ்வநாத்திடம் கோயிலை திறங்க அப்பதான் இந்த ஊரை காப்பத்த முடியும் என்று சொல்லி விட்டு இறந்து விடுகிறார். எழுவது வருடங்களாக பூட்டி இருக்கும் கோயிலை திறக்க கோயிலையும், அணையும் கட்டிய ராஜா லிங்கேஷ்வரனின் பேரன் லிங்கா (எ) லிங்கேஷ்வரனை தேடுகிறார் ஊர் தலைவரின் பேத்தியும், பப்ளிக் டிவியின் தொகுப்பாளினியும் ஆன அனுஷ்கா .

  லிங்கா (ரஜினிகாந்த்) சின்ன சின்ன திருட்டுகளை செய்து கொண்டு கனவு வாழ்க்கையில் இருக்கும் லிங்காவுக்கோ தாத்தா பேரை சொன்னாலே பிடிப்பதில்லை அதனால் தன் பேரை லிங்கா என்று சுருக்கி கொள்கிறார். திருடி விட்டு ஜெயிலுக்கு செல்லும் அவரை ஜாமினில் எடுக்கும் அனுஷ்கா அவரை சோலையூர் கிராமத்திற்க்கு வந்து அந்த கோவிலை திறக்கச் சொல்லி வேண்டுகிறார். அவர் மறுத்து விடவே, அவர் திருடும் ஒரு பெரிய திருட்டில் போலிசிடம் இருந்து அவரை காப்பாற்றி ஊருக்கு கூட்டி செல்கிறார். அங்கே போனதும் தான் தெரிகிறது அது ஒரு மரகத லிங்கம் என்று. அதை திருடிக் கொண்டு ஊரை விட்டே ஓடி விடலாம் என்று தீர்மானிக்கும் பொழுது மாட்டிக் கொள்கிறார்கள். அதில் இருந்து அழகாக தப்பித்துக் கொள்கிறார் லிங்கா தனது சமயோசித புத்தியால். அப்பொழுதான் தன் தாத்தாவின் வாழ்க்கை முழுவதும் , அவர் செய்த தியாகங்கள் முதற்க் கொண்டு தெரிய வருகிறது.
  தாத்தாவாகிய லிங்கேஷ்வரன் எவ்வாறெல்லாம் ஃப்ரிடிஷ் அரசாங்காத்திடம் அல்லல் பட்டு அந்த அணையை கட்டினார், எப்படி அவ்வளவு சொத்துக்களை இழந்தார், ஏன் அந்த கோவில் பூட்டிக் கிடக்கிறது, ஏன் லிங்கா அரச குடும்பத்தில் பிறந்து  திருடுகிறார், ஜகபதி பாபு ஜெயித்தாரா? லிங்கா அந்த லிங்கத்தை திருடினாரா?   என்பதெல்லாம் மீதீ கதைங்கோ.

 புதிய கோப்பையில் பழைய தேன் மாதிரிதான் இந்த கதை. பல இடங்களில் பழைய ரஜினி படங்கள் சாயல்கள். ஒரு சில இடங்கள் நன்றாக இருக்கிறது. அதற்க்காக வேண்டுமானால் நாம் இயக்குநர் KS ரவிக்குமார் அவர்களை பாராட்டலாம். மத்தபடி படம் மிகவும் சாதரணமாக இருக்கிறது. இது சூப்பர் ஸ்டார் படம் அதுதான் நிற்க்கிறது. மற்றபடி புதிதாக எதுவும் இல்லை. ஒரு சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் குறிப்பாக ஸ்பைடர் மேன் போல் ரஜினி பறந்து வரும் காட்சியை.



 ரஜினி அவர்களுக்கு இது அல்வா சாப்பிடுகிற மாதிரி படம்தான். இரட்டை வேடம் பேரன் ரஜினியைவிட தாத்தா ரஜினி அசத்துகிறார். இந்த படத்திலும் அவருடைய ஸ்டைல், புன்னகைக்கு குறைவில்லை அதே அசத்தல்.

 அனுஷ்கா நம் படங்களில் நடிகைகளுக்கு எவ்வளவு தரப்படுமோ அதே அளவு தரப்பட்டு இருக்கிறது. குறைவின்றி செய்து இருக்கிறார். இன்னொரு ஜோடி சோனாக்ஷி சின்ஹா , ஒரு சில இடங்களில் அபரீத அழகோடும், ஒரு சில இடங்களில் ஒட்டாத அழகோடும் திகழ்கிறார். இவருக்கு பின்னனி கொடுத்தவரை கிராமத்து தமிழ் பேசும் யாரையாவது போட்டிருக்கலாம். ஒட்டாமல் நிற்க்கிறது.


  சந்தானம், இவருது நகைச்சுவை சில இடங்களில் நல்ல ரசிப்பு. கருணாகரன் அதிக வேலை இல்லை ஆனால் அந்த மஞ்சள் பை, காமெடி சிறப்பு. அந்த நகை திருடும் காட்சி நல்ல கலகலப்பு.

ரஜினி படம் என்றாலே ஏராளமான நட்சத்திரக் கூட்டம் இருக்கும் . இந்த படத்திலும் அதற்க்கு குறைவில்லை.

இசை A R ரஹ்மான் அவர்கள். நிச்சயமாக பாடல்கள் நெஞ்சை தொடவில்லை என்பதே என் எண்ணம். ஆங்கிலப் பாடலா அல்லது தமிழ் பாடலா என்கிற திகைப்பு நமக்குள். லிங்கா சொத்தை யெல்லாம் இழக்கும் வேளையில் நாம் எதிர்பார்த்தது இன்னொரு நெஞ்சைத் தொடும் விடுகதையா இந்த வாழ்க்கை போன்ற பாடலை. அந்த உணர்ச்சி பெருக்கு இதில் இல்லை.
ஒரு வேளை கேட்க கேட்கத்தான் பிடிக்குமோ ? :)

 பாடல் வரிகள் வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி. வைரமுத்து அவர்களின் வரிகள் சில இடங்களில் நெஞ்சை அள்ளுகிறது.

வசனம் பொன் குமரன். சில வரிகள் மனத்திற்க்கு புத்துணர்வு தருபவை குறிப்பாக, வாழ்க்கையில் எதுவும் ஈஸி இல்ல முயற்ச்சி பண்ணா எதுவும் கஷ்டம் இல்ல போன்றவைகள்.

மொத்தத்தில் லிங்கா, முதற் பாதி தரிசனம், பிற்பாதி தூக்கம்.

ரஜினி படம் அதுவே சிறப்புதானே ரசிகர்களுக்கு :)

மீண்டும் சந்திப்போமா?

நன்றி!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!!