வீண்பேச்சு நமது ஆற்றலைக் குறைக்கும். மவுனம் ஆற்றலைப் பெருக்கும். ஆகவே, அவசியமில்லாப் பேச்சைத் தவிர்த்துவிடுங்கள். எப்பொழுதும் சிந்தித்த பிறகே பேச வேண்டும். அதே நேரத்தில், சிந்தித்ததையெல்லாம் பேசிவிடக் கூடாது. காரணத்தோடு சிந்தித்துக் கருத்தோடு பேசுவதற்குப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வார்த்தைகளைவிட மவுனமே வலிமையானது. மொழி என்பது வெளியே இருந்து நாம் பெறுகின்ற பயிற்சி ஆனால், மவுனம் என்து உள்ளத்தில் இருந்து எடுக்கின்ற முயற்சியின் காரணமாகக் கிடைக்கின்ற எழுச்சி உள்ளத்தில் உண்டாகும் எழுச்சி, எல்லாவிதமான சவால்களையும் வெல்லுகின்ற ஆற்றலைக் கொடுக்கவல்லது. மனம் தான் ஆற்றலின் சுரங்கம். மனம் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்போது, புதுப்புதுச் சிந்தனைகள் உங்களுக்குள் சிறகு விரிக்கும் அதன் காரணமாகச் சாதனை வளத்தின் முகவரி கிடைக்கத் தொடங்கிவிடும்.
கூர்ந்து நோக்க வேண்டும்:
புத்திசாலியாக இருப்பதற்கு எந்தக் காரியத்தையும் கூர்ந்து நோக்க வேண்டும்; ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். எதையும், மேலெழுத்துவாரியாகப் பார்க்கும்போது, அதிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொன்றின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். பாடங்களைப் படிக்கும்போது, கவனித்து அவற்றின் உட்பொருளைப் புரிந்து படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புதியன படைக்கும் வேட்கையைப் பள்ளிப்பருவத்திலேயே வளர்த்துக் கொண்டவர்கள், பிற்காலத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், தத்துவ ஞானிகளாகவும் உருவாகியுள்ளார்கள் என்பதை வரலாறுகள் காட்டுகின்றன.
ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைக் கூர்ந்து கவனித்த ஐசக் நியூட்டன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். பறவைகள் பறப்பதைக் கூர்ந்து கவனித்த ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள். இவ்வாறு ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் கூர்ந்து கவனித்ததின் வெளிப்பாடு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆகவே, எதையும் கூர்ந்து கவனித்து, ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள். அவ்வாறு செய்வதால், உங்களுடைய அறிவு விரிவடைவதுடன், சிந்திக்கும் ஆற்றலும் அதிகமாகின்றது. வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு அடித்தளமாக கூர்ந்து கவனிக்கும் பழக்கமும், ஆழ்ந்து சிந்திக்கும் மனமும் முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஒளியின் பாதையை தேர்ந்தெடுங்கள்:
சாதனைக்கு வயது தடையல்ல. முயற்சியும், உழைப்பும் இருந்தால் சாதனைச் சிகரத்தை எந்த வயதிலும் எட்ட முடியும். இளமையிலேயே வரலாறு படைத்தவர்களும் உண்டு. முதுமையில் சாதனைச் சிகரங்களைத் தொட்டவர்களும் உண்டு. எப்பொழுதும், எதற்காகவும் மனம் தளர்ந்து விடாதீர்கள். மக்களுக்குப் பயனுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் உங்களுடைய உள்ளமெங்கும் பரவ விடுங்கள் பின்னர் உங்களுக்குள் ஓர் உண்மை ஒளி பரவத் தொடங்கும். அதன் விளைவாக, உங்களுடைய வாழ்வின் இலட்சியம் தெளிவாகப் புரியத் தொடங்குவதை உணர்வீர்கள்.
முயற்சிகள் தோற்பதில்லை:
முன்னேற்றத்தின் திசைநோக்கி நகர்ந்துகொண்டே இருங்கள். நிழல் கூட நகரும்போது, நாம் நின்ற இடத்திலேயே நிலையாகிவிடுவது நியாயமா? சிந்தியுங்கள்Ð உங்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்வீர்கள்.
விதைகளை விருட்சமாக்குங்கள்:
ஒருவர் விதைகளை மடியில் கட்டிக்கொண்டு அலைவதால், எந்த விதப் பயனும் கிடைக்கப் போவதில்லை. அந்த விதைகளைப் பயிரிட்டு, விருட்சங்களை உருவாக்கினால், அவை அனைவருக்கும் பயன்படும். அதுபோல்தான், உங்களுக்குக் கல்வியின் மூலமாகவும், நூல்களின் வாயிலாகவும் சான்றோர்கள், உரைகளின் மூலமாகவும் கிடைக்கும் கருத்துக்களை வெறுமனே வைத்துக்கொண்டு இருப்பதால், எந்தவிதப் பயனுமில்லை.
அந்த அரிய கருத்துக்களை வாழ்க்கையில் பயன்படுத்தும் போதுதான் வளர்ச்சி பிறக்கின்றது. உங்களுக்கு எவ்வளவு விஷயங்களைத் தெரியும் என்பதைவிட அவற்றில் எவ்வளவு விஷயங்களை வாழ்க்கையில் பயன்படுத்துகின்றீர்கள் என்பதுதான் மிகவும் முக்கியம். இங்கே, நாம் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதாவது, ஒன்று எப்பொழுதும் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்கின்ற மனநிலையுடன் இருக்க வேண்டும். இரண்டாவதாக, கற்றவற்றை முடிந்த அளவிற்கு உடனடியாகச் செய்யும் இயல்பும் இருக்க வேண்டும்.
இந்த இரண்டு பண்புகளும், ஒரு சாதாரண மனிதனைச் சாதனையாளன் ஆக மாற்றுவதுடன், அவன் தொடர்ந்து சாதனையாளனாகவே இருப்பதற்கு வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். கற்றதை நடைமுறைப்படுத்தி முன்னேறிக் கொண்டே இருங்கள். ஏனென்றால், வளர்ச்சி என்பது வாழ்வின் தத்துவம். முயற்சி என்பது முன்னேற்றத்தின் அடித்தளம்.
கனிகள் இனிக்கும்:
“கல்வியின் வேரானது கசக்கும். ஆனால், அதன் விளைச்சல் இனிக்கும்” என்றார் அரிஸ்டாட்டில். இதைத்தான் நமது முன்னோர்கள், “மூத்தோர் சொல்லும் முற்றிய நெல்லிக் காயும் முன்னே கசக்கும்; பின்னர் இனிக்கும்” என்றார். ஆரம்பத்தில் சற்றுச் சிரமமாக இருந்தாலும் கல்வியில் மனம் ஊன்றிப் படிக்க வேண்டும். புரியாமல் படிக்கும்போது, படிப்பில் ஈடுபாடு வராது. ஆனால் அதையே நன்கு கவனித்துப் புரிந்து படிக்கும்போது நெஞ்சில் ஆர்வம் துளிர்விடத் தொடங்கும். ஆழ்ந்து படித்துப் புரிந்துகொள்ளும் கருத்துக்களை, நடைமுறை வாழ்வில் முடிந்தவரை பயன்படுத்தியும் பழக வேண்டும்.
அவ்வாறு வாழ்க்கைக்கு உதவும் வகையில் கல்வியைக் கற்றுக்கொள்ளும்போது, எதிர்காலம் மிகவும் சிறப்பானதாகவும், மகிழ்ச்சி மிக்கதாகவும், பயனுடையதாகவும் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. விதைக்காமல் விளைச்சல் இல்லை; உழைக்காமல் உயர்வு இல்லை என்பதை உணர்ந்து, ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தை நோக்கி உழைத்துக் கொண்டே இருங்கள். விதைத்துவிட்டால் மட்டும் விளைச்சல் கிடைக்காது. தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
“எவன் ஒருவன் விடாமல் முயற்சி மேற்கொள்கிறானோ, அவனுக்கு வெற்றி என்னும் புகழ் தேவதை மாலை சூட்டுகிறான்” என்றார் நெப்போலியன். ஆம் முடியாது என்று முடங்கிவிட்டால், மூச்சுக்காற்றும் நின்றுவிடும். முடியும் என்று துணிந்துவிட்டால், மூளைக்கும் மின்சாரம் பிறப்பெடுக்கும் முனைப்போடு செயல்களைச் செய்து முன்னேற்றப் பாதையில் முன்னேறுங்கள் வெற்றிக் கனிகளைச் சுவைத்து மகிழுங்கள்!
Tuesday, April 28, 2015
நகர்ந்துகொண்டே இருங்கள்.....by Bharathi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment