Thursday, May 28, 2015

சருமமே சகலமும்!


சருமமே சகலமும்!

தோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் 'பளிச்’ நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோ முயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் வேலை முடிவதில்லை. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யைத் தயாரிப்பது, வெளியில் இருந்து வரும் கிருமிகளை அண்டவிடாமல் அரண்போல் காப்பது, குளிர் காலத்தில் உடலைச் சூடாகவும், கோடைக் காலங்களில் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்வது எனப் பற்பல பணிகளை மேற்கொள்கிறது. உடலை ஒரு போர்வையாகப் போர்த்தி இருக்கும் சருமத்தைப் பாதுகாக்க, அழகாக்க, மிளிரவைக்க அட்டகாசமான டிப்ஸ்களை வழங்குகின்றனர் தோல் சிகிச்சை மருத்துவர் ரத்னவேல், சித்த மருத்துவர் வேலாயுதம், இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

வியர்வை
மனிதனின் உடலில் இருந்து ஒரு நாளைக்குச் சராசரியாக அரை லிட்டர் வியர்வை வெளியேறும். உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைப்பதற்குத்தான் வியர்வை சுரக்கிறது. அது வரும் பாதையில் அடைப்பு இருந்தால், அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சின்னச் சின்னக் கொப்பளங்கள் தோன்றும். இதுதான் வியர்க்குரு.

வியர்க்குரு பிரச்னையில் இருந்து விடுபட...

தினமும் குறைந்தது இரண்டு முறை குளிக்கவேண்டும். கேலமைன் (calamine)லோஷன் தடவுவது நல்லது.

நல்ல காற்றோட்டமான அறையில் இருந்தால், தோலில் ஏற்படும் அடைப்பு சரியாகிவிடும். பருத்தி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்க்ரீன் மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்துவது நல்லது.

இளம் சூடான நீரில் உள்ளங்கைகள், பாதங்களை 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால் வியர்வை குறையும். வியர்வையை அழுத்தித் துடைக்காமல், மிருதுவான துணியால் ஒத்தி எடுக்கவேண்டும். இது தற்காலிகத் தீர்வுதான்.

சித்த மருத்துவத்தில் தீர்வு தேடுவோர் 100 கிராம் செண்பகப்பூ, ரோஜா மொட்டு, பொன் ஆவாரம்பூ, தவனம் போன்ற பூக்களை உலர்த்தி, அத்துடன் கடலைப் பருப்பு சம அளவு எடுத்து, சிறிதளவு வெட்டிவேர், சந்தனம், வெள்ளரி விதை, முல்தானி மட்டி, கால் கிலோ பயத்தம்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியைத் தினமும் தேய்த்துக் குளிக்க, வியர்வை நாற்றம் நீங்கும்.

வியர்வையில் பூஞ்சைகள் வளரக்கூடும். அதனால், குளித்து முடித்ததும் வியர்க்குரு பவுடர் போடுவதன் மூலம் இதுபோன்ற பூஞ்சைப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.

உணவில் வெங்காயம் அதிகம் சேர்க்கக் கூடாது. டியோடரன்ட், சென்ட், க்ரீம்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.

சிவப்பும் கருக்கும்
பொதுவாக, தோலின் மேல்பாகம் 28 நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. தோலின் நிறம் ஃபியோமெலனின் (Pheomelanin)மற்றும் யூமெலனின் (Eumelanin)என்ற மெலனின் அணுக்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இயற்கை ஒருவருடைய தோலின் நிறத்தை கூடுதல் ஃபியோமெலனின் கொண்டு எழுதினால், அவருடைய தோல் நிறம் வெள்ளையாகவும், யூமெலனினைக் கூடுதலாகக் கொண்டு எழுதினால் கறுப்பு நிறமாகவும் அமையும்.

வெயிலில் அதிகம் அலைபவர்களுக்கு நிறம் மங்கும். கை, கழுத்து, முகம் பகுதிகளில் கறுத்துவிடும். நல்ல நிறத்துடன் இருப்பவர்கள் வெயிலில் போய்விட்டு வந்தால், கன்னம் மற்றும் முகம் சிவந்துவிடும். உடலில் மூடப்படாத பகுதியைத்தான் சூரியக் கதிர் நேரடியாகத் தாக்கி, எரிச்சலை ஏற்படுத்துகிறது.

கழுத்தில் அணியும் நகைகள், மஞ்சள் கயிறு இவற்றால் அலர்ஜி, அரிப்பு ஏற்பட்டு, தோலின் நிறம் மாறிவிடும்.

பாதிக்கப்பட்ட இடத்தில் பப்பாளியை அரைத்துப் பூசுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

தோல் பாதிக்கப்படாமல் இருக்க சன்ஸ்கிரீன் போடலாம். முடிந்தவரை, பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம்.

முகப்பரு
முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும்.

சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். இதற்கு, ஃபாலிகுலர் ஹைப்பர்கெரட்டோஸிஸ் (follicular hyperkeratosis) என்று பெயர். வைட்டமின் ஏ, டி அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் ஆகியவற்றின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது.

பரு வராமல் தடுக்க:

அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், கேலமைன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.

தினமும் ஐந்து முறை முகத்தை உங்கள் சருமத்துக்கு ஏற்ற சோப்பினால் கழுவ வேண்டும்.

ஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு இரண்டையும் சம அளவு எடுத்து, பால் விட்டு நைஸாக அரைத்து, பருக்களின் மீது பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும். நிறமும் கூடும்.

எலுமிச்சம்பழச் சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும்.

ஆறு மாதங்கள் தொடர்ந்து டாக்டரின் அறிவுரையின்பேரில் மாத்திரை, மருந்துகள் மற்றும் களிம்பு பயன்படுத்துவதன் மூலம், முகப்பரு மறுபடியும் வராமல் தடுக்கலாம்.

பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மை உள்ள மரு, டாட்டூ மற்றும் பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சைமுறைகள் உள்ளன.

அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக்கொண்டு மட்டுமே குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்குத் தகுந்த சிகிச்சைமுறையைத் தேர்வு செய்வதன்மூலம், வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும்

No comments: