அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம். நலம்தானே? நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
எத்தனை எத்தனை மாற்றம் உலகம் அடைந்தாலும் பெண்மைக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் மாறவும் இல்லை.அதன் பாதிப்பு குறையவும் இல்லை. எத்தனையோ கொடுமைகளை நம் காதுகள் கேட்டு விட்டன, அதை ஒதுக்கி தள்ளியும் விட்டது.
வீட்டை விட்டு வெளியே வரவே பெண்கள் யோசித்த காலங்களும், பல அடக்கு முறைகளுக்கு அடங்கி அடுப்படியே திருப்பதி, ஆம்படையானே பெருமாளு என்றும் இருந்த காலங்களும் உண்டு. இதை எல்லாம் தாண்டி வெளி உலகத்திற்க்கு வந்து ,சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்கள். அதற்க்குள்ளாகவே பல இன்னல்களை நம் பெண் குலம் பார்த்து விட்டது. ஆனால் அதை எல்லாவற்றையும் விட இப்பொழுது பல பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். சைபர் குற்றங்கள் முதல் கற்ப்பழிப்பு வரை.இந்த விஷயங்களை சாதாரண விஷயங்களாக விட்டு விட முடியுமா? விட்டு விடலாமா?
அதுவும் சமீபகாலமாக நாம் அதிகமாக கேள்விப்படும் அதிர்ச்சியான விஷயம் கற்ப்பழிப்பு. அதற்க்கு முன்பு கூட நாம் கேள்விப்பட்டோம், ஆனால் நம் மனதை அதிகமாக பாதிக்கவில்லை. காரணம் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. இவர்களுக்கு அதிக இலாபம் தரும் நிகழ்ச்சிக்காகவும், தங்கள் கட்சிகளைப்பற்றிப் பெருமை பேசவும், தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும் மட்டுமே இவர்கள்.
அத்தனை சேனல்கள் இருந்தும் நம்மால் எது உண்மை என்று கண்டு கொள்ள முடியாத அளவிற்க்கு பொய்யும், புரட்டும் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. அதனால் நம் நாட்டில் நடந்த எத்தனையோ கற்ப்பழிப்புகள் நமக்கு தெரியவும் இல்லை, குற்றவாளிகள் எவ்வளவு பேர் தண்டிக்கப்பட்டார்கள் என்பதும் தெரியவில்லை.
ஆனால் தற்பொழுது ஒரு கல்லூரி மாணவிக்கு தலைநகரம் தில்லியில் நடந்த ஒரு கொடுமையான பாலியல் பலாத்காரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. அந்த செய்தியைப் படித்ததும் கண்ணீர் வந்தது, அந்த ஓநாய்களை அப்படியே வெட்டி சாய்க்க வேண்டும் போல் ஒரு ஆத்திரம் வந்தது. ஐந்தறிவு ஜீவன் கூட இப்படி ஒரு கேவலமான செயலை செய்யாது. ஆனால் ஆண் செய்கிறான் அதுவும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல். பெண் என்ன அவ்வளவு கேவலமான பொருளா? தன் தேவைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி எறிய. நம் தமிழ் நாடு இந்தியாவில் 4வது இடத்தில் இருக்கிறது. எவ்வளவு வேதனையான விஷயம்?
இதற்கெல்லாம் மத்தியில் பெண்கள் ஆபாசமாக உடை அணிவதால்தான் இப்படி நடக்கிறது என்று சில கோமாளிகள் கூவிக் கொண்டிருக்கிறார்களாமே? அப்படி சொல்பவர்கள் அனைவரைப் பார்த்தும் நான் கேட்க்க விரும்பும் கேள்வி ஒன்றுதான். சமீபத்தில் ஹைதராபாத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த ஐந்து வயது சிறுமி அப்படி என்ன ஆபாச உடை அணிந்து வந்து மயக்கி இருப்பாள் சொல்லுங்கள்?.
வினோதினி என்ற பெண் திராவக வீச்சுக்கு ஆளாகி இருக்கிறாள். பாட்னாவில் மூன்று பேரால் பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண் போலீசாரின் மோசமான விசாரணையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருகிறாள்.இந்த விவகாரத்தில் நாம் சீர்திருத்த வேண்டியதும் செய்ய வேண்டியதும் ஏராளமாக இருக்கிறது. ஆனால் நம் அரசு செய்து கொண்டிருப்பது என்ன? பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் புகைப்படங்களை வெளியிடப் போகிறார்களாம். ஏன் அவர்களைப் பார்த்து மத்த பெண்கள் முடங்கிக்கொள்ளவா? தெரியவில்லை. எங்கே ஓட்டை என்று தேடினால், கிழிந்து போய் கிடக்கிறது நாடு தைக்கவே முடியாத நிலைக்கு.
ஆண்களின் கண்ணோட்டத்தையும், அவர்களின் நினைப்பையும் சீர்திருத்த வேண்டிய கட்டயாமான நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. பத்திரிக்கைகள் ஒரு புறம் கூவிக்கொண்டிருக்கின்றன். கற்ப்பழிப்புக்கு உடைதான் காரணம் என்று. ஆனால் அந்த பத்திரிக்கைகளின் அட்டை படம் முதல் நடுப்பக்கம் வரை கவர்ச்சி படங்கள் கண்ணை கூச வைக்கின்றன. சொல்வது ஒன்று செய்வது ஒன்று நம் நாட்டின் பழக்கமா அது? பெண்ணை தெய்வமாக மதிக்கும் நாடு என் நாடு என்று என்னால் பெருமை பேச மட்டுமே முடிகிறது. எங்கே போனது தெய்வம்? நீ தெய்வமாக மதிக்க
வேண்டாம் ஆனால் அவளுக்கு உயிரோடு சமாதி கட்ட வேண்டாமே.
இதற்க்கெல்லாம் நடுவில் அரசியல் வாதிகளின் அர்த்தம் இல்லாத விளம்பரப் பேச்சுக்கள்.அவ்வளவும் மனதை பாதிக்கும் விஷயங்கள்.எனது நண்பர் ஒருவர் அழகாக தன் இணைய தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அது, அமெரிக்காவில் ஒரு மனநோயாளி சமீபத்தில் பள்ளியில் நுழைந்து பள்ளி மாணவர்களை கொன்று குவித்தான். அதை குறிப்பிட்டு, அமெரிக்கனே நீ ஏன் அங்கே உள்ள அப்பாவி மாணவர்களை கொன்று குவிக்கிறாய். இங்கே வா, இங்கு நிறைய கற்பழிப்பாளர்கள், கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், சமூகத்தை சுரண்டும் சுயநலவாதிகள் இருக்கிறார்கள். எங்க அரசுக்கு அவங்கள கட்டுப்படுத்த தெரியவில்லை என்று. உண்மைதானே?
இதற்க்கு கடுமையான தண்டனைகள் இருந்தலேயன்றி இதை நாம் சரி செய்ய முடியாது. அப்பொழுதுதான் இப்படிப்பட்ட ஆண்களுக்கு உறைக்கும். தன் வீட்டில் உள்ள பெண்களைப் போலவே மற்ற பெண்களையும் பாருங்கள். அவர்களும் சக மனிதர்கள் தான். பெண்களே நாமும் விழிப்புணர்வோடு செயல்பட்டு நம்மை தற்க்காத்துக் கொள்வோம். எதிரியை தாக்கும் உத்தியை படிப்போம். இனிமேல் என் நாட்டில் இதைப் போன்ற ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என்று பிரார்த்திப்போம். பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரிகளும் உடலாலும், மனதாலும் நலம் பெற பிரார்த்திப்போம்.
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!
--- பாட்டுச்சித்தன் பாரதி
எது எப்படியோ சேனல்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம். தங்கள் முதல் பக்கங்களுக்கு ஒரு மாதத்திற்க்கு விஷயம் இருக்கே.
இதைப்போன்ற ஈனச்செயல்களுக்கு இப்படிப்பட்ட ஒரு கடுமையான போராட்டம் நிச்சயம் தேவை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?
வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
No comments:
Post a Comment