அன்புள்ள நண்பர்களே,
வணக்கம். நலம்தானே? மீண்டும் உங்களை திரைவிமர்சனத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சில நேரங்களில் நாம் நினைப்பதுண்டு டூயட் இல்லாத, கண்ட வசனங்கள் இல்லாத, 100 பேரை ஒரு ஆள் அடித்து உதைப்பது இல்லாத, டாஸ்மார்க் இல்லாத படங்களை நாம் பார்க்கவே முடியாதா என்று. இத்தனை எதிர்பார்ப்பையும் நிறைவு செய்து, ஒன்றறை மணி நேரத்தில் முடியும் ஒரு படம் தாங்க இது. அட!!! என்று நீங்க ஆச்சர்யப் படுவது தெரியுது.வாங்க படத்தை பார்க்கலாம்.
ஜெபின் ஒரு தொழிலதிபரின் மகன். எழுத்தாளனாக வேண்டும் என்று மிகவும் விரும்பும் ஒரு சராசரி இளைஞன். ஆனால் தந்தையின் உடல் நலக் குறைவினால் தொழிலை கவனிக்க ஆரம்பிக்கிறார். இதில் இவர் நஷ்டத்தை சந்திப்பதால் சொத்துக்கள் அனைத்தையும் இழக்கிறார். தந்தை(நாசர்) கோமாவில் விழுந்து இறந்து விடுகிறார். இவருக்கு ஆறுதல் சொல்ல வரும் குடும்ப நல வழக்கறிஞர், இவர் பெயரில் ஒரு பங்களா ஒன்று பாண்டிச்சேரியில் இருப்பதை சொல்கிறார். இவரின் தாய் இறந்தவுடன் அந்த வீட்டை விட்டு வந்து விட்டதாக கூறுகிறார். தன்னிடம் தன் தந்தை மறைத்து விட்டார் என்று தன் காதலியிடம்(சஞ்சிதா ஷேட்டி) சொல்லி புலம்புகிறார்.
அந்த வீட்டிற்க்கு குடி பெயருகிறார். நாமும் அவரோடு ஆவலாக உள்ளே போகிறோம். மனதில் ஒரு திக் திக் திக் என்று ஆரம்பிக்கிறது. மிகவும் அழகாகவும் , ரசனையோடும் கட்டப்பட்டிருக்கிறது. நிறைய ஓவியங்கள் நிறைந்து இருக்கிறது. ஒரு ஓவியம் மட்டும் ஒரு புதிராக காட்சி தருகிறது. ஒரு நாள் ஜெபின் பியானோ வாசிக்கிறார். அப்பொழுது அதில் இருந்து ஒரு சாவியை கண்டு பிடிக்கிறார். அந்த ஓவியத்தை எடுத்து பார்க்கிறார். அந்த வீட்டின் அமைப்பை அப்படி ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். அந்த ஓவிய அமைப்பின்படி அவர் போகும் பொழுது அந்த ஓவியம் ஒரு அறையில் முடிகிறது. அவர் அந்த அறையை திறந்து பார்க்கும் பொழுது நிறைய ஓவியங்கள் கிடைக்கிறது.
இதில் என்ன விசேஷம் என்றால் அந்த ஓவியங்கள் முழுவதும் தன் வாழ்வில் நடந்த விஷயங்கள்தான் என்பது ஜெபினை மேலும் ஆச்சர்யப்பட வைக்கிறது. மேலும் அந்த ஓவியங்கள் சொல்லும் எதிர்கால விஷயங்கள் மேலும் அவரை பயமுறுத்துகிறது. அவர் இறந்துவிடுவார் என்றும் சொல்கிறது.
இந்த வீட்டைப் பற்றி தன் தந்தை ஏன் சொல்லவில்லை என்றும், அவர் வீட்டை எவ்வளவு முயன்றும் ஏன் விற்க்க முடியவில்லை என்றும் ஜெபின் தன் வழக்கறிஞரிடம் விசாரிக்கிறார். ஆனால் அவருக்கும் இதற்க்கான காரணம் தெரியவில்லை.
இதனால் நண்பருடன் சேர்ந்து வீட்டின் சொந்தக்காரர் யார் என்று தேடுகிறார்கள். அதில் கிடைக்கும் பயங்கரமான தகவல்கள் பல அதிர்ச்சியோடு , சில உண்மைகளையும் சொல்கிறது. வீடுதான் காரணம் என்பதை கண்டு பிடிக்கிறார். இதற்க்கு முன்னால் இருந்த ஒரு பிரன்ச்காரர் ஒருவர் பிளாக் மேஜிக் பயன்படுத்தி வீடு முழுவதும் நெகடிவ் எனர்ஜியை நிரப்பினார். இதனால் இந்த வீட்டில் வசிக்கும் யாரும் உயிரோடு இருக்க முடியாது என்று தெரிந்து கொள்கிறார். நெகடிவ் எனர்ஜியை போக்கினாரா? தன் உயிரைக் காப்பாற்றி கொண்டாரா? என்பதே மீதிக் கதை.
ஒரு சிறு துரும்பை பிடித்துக் கொண்டு பெருங்கடலை கடந்திருக்கிறார் தீபன். முதலில் இயக்குநரின் துணிவை முதலில் பாராட்டுவோம். அறிவியலையும்,மூடநம்பிக்கையும் சேர்த்து நன்றாக அலசி இருக்கிறார். நிறைய புதிய விஷயங்களையும் நமக்கு சொல்லி இருக்கிறார். கோவிலுக்குள் செல்லும் பொழுது எப்படி உடை உடுத்தி செல்ல வேண்டும் என்பது முதல் இன்னும் பல விஷயங்கள் புதிதாக இருக்கிறது.
அசோக் செல்வம், சஞ்சிதா, நாசர் மற்றும் பலர் தங்களது பங்களிப்பை செவ்வனே செய்து இருக்கிறார்கள். இசை சந்தோஷ் நாரயாணன்.
படத்தை மிகவும் விறுவிறுப்பாகவும், அடுத்தது என்ன என்று எதிர்பார்க்க வைத்த வேகமும் படத்தின் பெரிய வெற்றி. அங்காங்கே சில குறைபாடுகள் இருந்தாலும் அது தெரியாத வண்ணம் நிறப்பப் பட்டிருக்கிறது.
மொத்தத்தில் பீட்சா-2 வில்லா, கல்லா களை கட்டும்.
நீங்களும் உங்கள் கருத்தை பதியுங்கள்.
மீண்டும் சந்திப்போமா? நன்றி!!
வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!
No comments:
Post a Comment