Monday, January 21, 2013

படித்ததில் பிடித்தது: விகடன்

‎''இயற்கையை வெல்ல முயற்சிக்கும் மனிதனால் வெல்லவே முடியாதது எது?''

''மரணம்!

சீனத்தில் ஒரு கதை உண்டு. சாவே அடையாமல் சிரஞ்சீவியாக வாழ நினைத்த சீன அரசர், அதற்காக வித விதமான மருந்துகள், லேகியங்களை சாப்பிட்டாராம். இதற்காகவே, அரண்மனையில் நான்கு மருத்துவர்களையும் வைத்து இருந்தாராம்.
...
ஒருநாள் அரசர் குடிக்க வைத்து இருந்த மருந்தை அமைச்சர் ஒருவர் எடுத்துக் குடித்துவிட்டார். கோபப்பட்ட மன்னர், அவருக்கு மரணதண்டனை அளிக்க உத்தரவிட்டார்.

அவரின் தலையை வெட்ட வீரர்கள் கத்தியை ஓங்கியபோது, அந்த அமைச்சர் மன்னரிடம் கூறினாராம், " நீங்கள் மரணம் அடையாமல் சிரஞ்சீவியாக வாழ்வதற்காகத் தயார் செய்த மருந்து இது. இதை நான் குடித்ததற்காக என்னைக் கொல்ல ஆணையிட்டுவிட்டீர்கள். ஒருவேளை இவர்கள் வெட்டி நான் இறந்துவிட்டால், இந்த மருந்து பயனற்றது என்று எல்லோருக்கும் தெரிந்துவிடும். அப்படியானால், நீங்கள் பயனற்ற மருந்துகளைத்தான் அருந்துகிறீர்கள் என்பதும் தெரிந்துவிடும்" என்றார். சுதாரித்த மன்னர் அவரை விடுவிக்கச் சொல்லி ஆணையிட்டார்.

மனிதனுக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் இருந்து மனிதனின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று மரணத்தை வெல்வது. ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல், தங்களால் இயன்ற சாதனைகளைச் செய்பவர்கள், எந்த அதிசய மருந்துகளையும் உட்கொள்ளாமல் மரணத்துக்குப் பிறகும் மற்றவர்களின் மனதில் வாழ்கிறார்கள்!''

- ராமலட்சுமி, ராஜபாளையம்.
( நானே கேள்வி நானே பதில் - விகடன் 2011 )

No comments: