Wednesday, January 23, 2013

ஆண் என்ன? , பெண் என்ன?


அன்புள்ள நண்பர்களே,
வணக்கம். நலம்தானே? என்னை பாதித்த இரண்டு விஷயங்களுக்காக நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். நான் என்னை சுற்றி நடந்த, நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன். நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள்.
சமீபத்தில் பெண்மை வாசகி ஒருவர் தான் கருவுற்றிருப்பதாகவும், தன் கணவன் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி புரிய வைப்பது, இது என் கையில் இல்லை என்று?
இதைப் படித்ததும் ஒரு புறம் இவரைப் போல பாதிக்கப்பட்டிருக்கும் சகோதரிகளை எண்ணி அழுவதா? அல்லது இன்னும் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்கும் இந்த கோமாளிகளை எண்ணிச் சிரிப்பதா? என்று தெரிய வில்லை. இதை நான் சாதாரணமாக பார்க்க வில்லை. ஒரு முறை நான் என்னுடய ஊர் செல்வதற்க்காக பேருந்திற்க்காக காத்துக் கொண்டிருந்தபோது, எங்களுடய ஊரைச் சேர்ந்த பெண்ணைப் பார்த்தேன். என்னை விடச் சின்னப்பெண் மூன்று பெண் குழந்தைகளை வைத்திருந்தாள். வயிற்றிலும் சுமை.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னம்மா இது? என்னக்க பன்றது. மூனும் பொண்ணா போயிடிச்சி. அடுத்ததாவது பையனா இருக்காதா என்றாள். எனக்கு மயக்கமே வரும் போல் இருந்தது. அடுத்ததும் பெண்ணாக போய் விட்டால் என்றேன். வெட்கச் சிரிப்புடன், திருப்பி முயற்ச்சி பண்ண வேண்டியதுதான் என்றாளே பார்க்கலாம். அப்புறம் ரகசியக் குரலில் பையன பெக்கலனா யாரும் மதிக்கவே மாட்டென்றாங்க என்றாள். எங்கே போய் முட்டிக் கொள்வது? எங்கே ஆரம்பிக்கிறது தவறு? ஒரு சமூதாயம் மதிப்பதற்க்காகவா ஒரு ஆண் பிள்ளையை பெற்றுக் கொள்கிறார்கள்? மதிப்பது என்றால் எந்த விதத்தில்?, இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள்.

இதற்க்கு அடிப்படை காரணமாக நான் பார்ப்பது அறியாமையைத்தான். கிராமங்களில் இன்னும் பெண்களுக்கு முழுமையாக கல்வி அறிவு இல்லை. அப்படியே இருந்தாலும், சுற்றி இருப்பவர்களுக்கும், கணவனுக்கும் கட்டுப்பட்டு கிடக்கிறாள்.

இப்படி இவர்கள் பெற்றெடுக்கும் ஆண் பிள்ளைகளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். எதற்கெடுத்தாலும் அவன் ஆம்பிள அவன் வழிக்கு நீ ஏன் போற என்று பெண்ணை தாழ்த்தியும், ஆணை உயர்த்தியும் பேச ஆரம்பிக்கிறார்கள். இங்கே இருந்து ஆரம்பிக்கிறது ஆண் என்ற தலைக்கணம். நாம என்ன செய்தாலும் தப்பில்லை என்ற எண்ணம் பெற்றோர்களால் அவரகளுக்கே தெரியாமல் ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் இவ பொம்பளதானே என்ற ஒரு தாழ்வான எண்ணம் இயற்கையில் ஏற்படுகிறது. பெண்கள் தனக்கு கீழ் படிந்தவர்கள் என்ற ஆழமான எண்ணம் சிறு வயது முதல் உண்டாகிறது.

ஆனால் இதற்க்கு விதிவிலக்கான குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதை எல்லாம் தாண்டி, நிறய திரைப்படங்களில் நான் பார்த்திருக்கிறேன் பொம்பளன்ன ஒழுங்க அடக்கமா இருக்கணும். எந்த தப்பையும் தட்டிக் கேட்க கூடாது. அப்புறம் ஒருவன் பயந்து விட்டால், உடனே பொம்பள மாதிரி போய் சேலையும், வளையலும் போட்டுக்கோ என்று சொல்வது. பெண்கள் என்றால் ஆணுக்கு அடங்கியவள், கட்டுப்பட்டவள் என்ற எண்ணம் கொண்ட ஆணாதிக்க சமுதாயம். என் குலம் புலியை முறத்தால் அடித்து விரட்டிய மங்கையர் குலம். இந்த கைகள் சமைத்து போட மட்டுமல்ல, சமயத்தில் சரித்திரம் படைக்கவும் செய்யும் ஆண்குலம் புரிந்து கொள்ள வேண்டும். தொட்டிலை ஆட்டும் கை, தொல்லுலகம் ஆளும் கை என்பதை மறக்க வேண்டாம். தாய்மார்கள் இதை முதலில் புரிந்து கொண்டு பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகள் முன்பு மட்டம் தட்டி பேசுவதை நிறுத்துங்கள்.


சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;




எந்த விதத்தில் இவர்கள் உயர்ந்தவர்கள். நீயும் பத்து மாதம், நானும் பத்து மாதம். ஒரு விஷயத்தைத் தவிர உடல் அமைப்பு மட்டும் வலிமையைத்தவிர மற்றவை எல்லாவற்றிலும். நீயும் நானும் சமம். இதை ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு புரிய வையுங்கள்.
பெண்ணை கவர்ச்சி பொருளாக, கேவலமான கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அவளும் உன்னைப் போல் சதையும், இரத்தமும், உணர்ச்சிகளும் கொண்ட மனுஷி என்பதை உணர்த்துங்கள். உணராத ஆண்கள் இனிமேலாவது உணருங்கள்.

இதைப் போலவே சில குடும்பங்களில் ஆண் குழந்தை என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார்கள். பெண் குழந்தை எதை கேட்டாலும் தள்ளிப் போடுவார்கள். அதேப் போல் பள்ளிகளில் கூட வித்தியாசம் இருக்கும். அவன் ஆம்பிள புள்ள நாள பின்ன குடும்பத்த காப்பாத்துவான். நீங்க அடுத்த வீட்டுக்கு போய் ஆக்கி கொட்ட போறவ, எதுக்கு உசந்த பள்ளிக்கூடம் என்பார்கள். தன்னை மட்டுமல்ல தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் காப்பாற்றும் தன்மை கொண்டவள் பெண். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு வீடு சிறக்கும். ஒரு வீடு சிறந்தால் ஊர் சிறக்கும். ஒரு ஊர் சிறந்தால் ஒரு மானிலம் சிறக்கும். ஒரு மானிலம் சிறந்தால் என் நாடு சிறக்கும். தயவு செய்து கல்வியில் பாரபட்சம் பார்க்காதீர்கள். என் தோழிகள் அனைவரும் சிறந்த கல்வியாளர்களாகவும், சிறந்த நிர்வாகிகளாகவும் விளங்க வேண்டும். இனிமேல் வரும் சந்ததிகள் நிச்சயம் சமமான சகோதர, சகோதரி பாசத்தோடு இருக்க இப்பொழுதிருந்து பாடுபடுவோம். இது நம் கையில் தான் இருக்கிறது. நாம் நினைத்தால் நிச்சயம் ஏற்றத்தாழ்வுகளை களையலாம்.


எந்த குழந்தையாக இருந்தால் என்ன? நாம் அந்த குழந்தயை தாய்ப்பற்று, நாற்றுப்பற்று, உயிர்கள் அனைத்தின் மீதும் பற்று வைத்து அன்பே சிவம், அன்பே யேசு, அன்பே அல்லா என்று அதற்க்கு உணர்த்துவோம். வயதான காலத்தில் நம் வலியும் , வேதனையும் புரிந்து கொண்டு நம்மை குழந்தையாக பாவித்து நம்மிடம் அன்பு காட்டும் பண்பை நம்மிடம் இருந்து ஊட்டுவோம். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ அதை ரசியுங்கள். முன்பிருந்த நிலை தற்பொழுது மாறி இருக்கிறது. அதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் விகிதம் மிகக் குறைவு. சில இடங்களில் பெண் குழந்தையை கொன்று விடுகிறார்களாம். எழுதும் பொழுதே கண் கலங்குகின்றது. அவ்வளவு வேண்டாதவர்களா பெண்கள். தாய்மார்களே பெண்களின் விகிதம் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. நாளை நீங்கள் உங்கள் பிள்ளைக்கே பெண் தேடும் போது சிரமப்படலாம்.

கிராமப்புறங்களில் நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் முயற்ச்சி எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகள் குடும்பக்கட்டுப்பாடு, சிசுக்கொலை, விழிப்புணர்வு மற்றும் பெண் கல்வி போன்றவை தீர்க்க முடியும். பார்க்கலாம்.
என்ன தோழிகளே நான் சொல்வது சரிதானே?உங்கள் கருத்துக்களை தயவு செய்து பதியுங்கள்.

மீண்டும் சந்திப்போமா? நன்றி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

3 comments:

Jayasree said...

இதை அறியாமை என்பதா , இல்லையேல் சமுதாயம் ஏற்படுத்திய நிலைமை என்பதா? ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது கடவுள் இவர்கள் செய்யும் கொடுமையை கண்டு தான் பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கையை குறைத்து விட்டான்.

Anu said...

உண்மைதான் ஜெய். என்ன செய்வது? காலம் மற்றும் மனித மனங்களின் வளர்ச்சியே இதை மாற்ற வேண்டும். நன்றி :)

Sujatha said...

This is the mentality of many "ladies" too and not just in villages.

The saddest part is that even ladies wish they want a baby boy.