Friday, December 27, 2013

The Lunchbox (தி லன்ச்பாக்ஸ்) திரைவிமர்சனம்

அன்புள்ள நண்பர்களே,

   வணக்கம். நலம்தானே? ஒவ்வொரு முறையும் தமிழ் படத்தின் திரைவிமர்சனத்தை சமர்பித்தேன். இம்முறை என்னை கவர்ந்த ஒரு ஹிந்தி திரைப்படத்தை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன். நமது வாழ்வில் உணவு என்பது இன்றியமையாத ஒரு விஷயம். அதை நாம் அனைவரும் அறிந்ததே. அதே உணவு மிக அன்போடும், அக்கறையோடும் தயாரிக்கப் பட்டு பறிமாறப் பட்டால் எப்படி இருக்கும். மிக சுவையாக இருக்கும். ஆக அந்த அன்பு என்ற ஒன்று ஒவ்வொருவரின் வாழ்விலும் எவ்வளவு முக்கியம் என்று சொல்லும் படம்தாங்க இது வாங்க லன்ச்க்கு போகலாம்... இல்ல படத்துக்கு போகலாம்.

   படத்தோட பேர கண்டு பிடிச்சிட்டிங்கன்னு நினைக்கிறேன். அட ஆமாங்க The Lunchbox (தி லன்ச்பாக்ஸ்) படத்தைத்தான் நாம இப்ப பார்க்கப் போறோம்.

 இந்த படம் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் ஒரு நிகழ்வ்வு. அதுவும் டப்பாவாலா என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இளா என்கிற குடும்பத் தலைவி தன் கணவனுக்காக தினமும் லன்ச் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் அது தவறுதலாக வேறொருவருக்கு போகிறது. அந்த நபர் மனைவியை இழந்து தனிமையில் இருப்பவர். அந்த உணவின் சுவையும் மனமும் அவர் மனதையும், நாவையும் கட்டி இழுக்கிறது. தினமும் டப்பா காலியாக வருவது மிகவும் சந்தோசத்தை எழுப்புகிறது இளாவிற்க்கு. அதை கணவனிடம் கேட்கும் பொழுது வேறொரு உணவை சொல்லி நன்றாக இருந்தது என்று கணவன் சொல்கிறார். அதிலிருந்து அவருக்கு தெரிந்து விடுகிறது உணவு வேறு யாரோ உண்ணுகிறார்கள் என்று. இவரின் மேல் வீட்டில் உள்ளவர் தேஷ்பாண்டே என்ற வயதான முதியவள். அவளிடம் கேட்டு கேட்டு தினமும் இளா உணவு தயாரிப்பார். அவரிடம் இவர் இந்த விஷயத்தை சொல்ல, அவர் கடிதம் எழுதி டப்பாவில் வைக்க சொல்கிறார். அதன் மூலம் இருவரும் நல்ல நண்பர்களாகிறார்கள். இளாவின் கணவன் இவளிடம் சரியாக பேசுவதுக் கூட கிடையாது.இதை வைத்து இளா கண்டு பிடித்து விடுகிறார் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது. அது அவரின் மனதை மிகவும் பாதித்து தற்கொலை வரைக் கூட முயற்சிக்கிறார் தன் குழந்தையுடன். அந்த நண்பர் சஜன் பெர்னாண்டஸ் , இவருக்கு பல்வேறு யோசனைகளும் கூறுகிறார். நாளடைவில் இவர்களின் முகம் பார்க்காத நட்பு மெல்ல காதலாக உறுவாகிறது. இருவரும் வயது வித்தியாமின்றி அன்பினால் இணைந்தார்களா என்பதே முடிவு.



 மிகவும் குறைந்த கதாபாத்திரங்கள். வலிமையான கதை அதில் ஆழமான பெண் மற்றும் ஆணின் உணர்வுகளை வெளிப்படுத்திய இயக்குநர் ரித்தேஷ் பாட்ரா(Ritesh Batra) அவர்களுக்கு பாராட்டுக்கள். மிகவும் அமைதியாக நகர்கிறது கதை. ஒரு டப்பா எங்கெங்கோ சுற்றி எப்படி ஒரு இடத்தை அடைகிறது என்பது மிகவும் ஆச்சர்யம் கலந்த உண்மை. சின்ன சின்ன கதாபாத்திரமும் நமக்கு நல்ல விஷயத்தை சொல்கிறது.

பெர்னாண்டஸ் ஆகா இர்பான் கான் அமைதியும் அழுத்தமுமாக மிக நன்றாக நடித்திருக்கிறார். இளாவாக நிம்ரட் எதிர்பார்ப்போடு சமைப்பதாகட்டும், கணவனின் வருகைக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்திருந்து ஏமார்வதாகட்டும் மிக அழகு+எதார்த்தம். அவரின் விதவிதமான் சமையல் நாவில் நீர் ஊறவைத்து விட்டது.

 பெண் என்பவள் பாத்திரம் கழுவி, சமைப்பதற்க்கு மட்டும் அல்ல. அவள் எண்ணமும், சிந்தனையும் கொண்டவள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கொண்டவள் என்பதை நம் நாட்டில் எத்தனைப் கணவன் புரிந்து வைத்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் இந்த படத்திற்க்கு பிறகு ஒரு சிலர் மனதாவது மாறும் என்று நம்புவோம்.

மொத்தத்தில் லன்ச்பாக்ஸ் , என்றென்றும் கெடாததும் + நாவில் நீர் ஊறவைப்பதும்.

மீண்டும் இதேப்போல் ஒரு திரைவிமர்சனத்தோடு சந்திப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமைகளே!!

வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!


No comments: