Tuesday, March 26, 2013

வத்திக்குச்சி திரைவிமர்சனம்


அன்புள்ள நண்பர்களே!!,

    வணக்கம். மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி :)
நல்லதுக்கே காலம் இல்ல, நல்லவங்க நாட்டுல குறைஞ்சிட்டாங்கப்பா... இப்படி பல வசனகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதை ஒட்டி வந்த படம்தான் நாம் பார்க்க போவதும். அட கண்டுபிடிச்சிட்டிங்களா? ஆமாங்க வத்திகுச்சி படம்தான்.

 மூன்று நபர்கள் தங்கள் வாழ்க்கையை கெடுத்துவிட்டான். அவனை உயிரோடு விடக்கூடாது என்று சபதம் போடுகிறார்கள். அந்த மூவரும் குறி வைப்பது ஒருவனைத்தான் என்று தெரிகிறது. சரி இந்த படத்துல ஹிரோதான் வில்லன் போல இருக்கு என்று நினைத்தால் அது இல்லங்க.

 சக்தி (தீலிபன்) ஷேர் ஆட்டோ ஓட்டுனர். அதே சமத்துவபுரத்தில் வசிப்பவர் மீனா(அஞ்சலி). சக்தி தினமும் மீனா வீட்டின் வாசலில் தவம் கிடக்கும் வாலிபர். ஒரு தலைக் காதல். இரத்தத்டோடு வரும் குணம் தான் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம். அது போல் இயல்பிலேயே அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட குடும்பம். ஒரு முறை குடும்பத்தோடு வெளியில் செல்லும் போது ஏடிம் ல் பணம் எடுக்கும் பொழுது அவர் கழுத்தில் கத்தியை வைத்து , பொது இடத்தில் 10000 ரூபாயை பிடிங்கிக்கொள்கிறார்கள். அது சக்தியின் மனதை மிகவும் பாதிக்கிறது. மிகவும் வலி வாய்ந்த விஷயம், மற்றவர்களால் ஏமற்றப்படுவதுதான். அது அவரை நிம்மதியாக தூங்க விடுவதில்லை. அது அவரை மிகவும் பாதிக்கிறது. இதனால் அந்த ரௌடி கும்பலிடம் அடிக்கடி மோதி பகையை வளர்த்துக் கொள்கிறார். தன்னையும் உயர்த்திக் கொள்கிறார். சண்டை பயில்கிறார், நன்றாக சாப்பிடுகிறார். கடைசியில் அவர்களுடன் மோதி 10000 பணத்தை திரும்ப வாங்கி விடுகிறார். ஆனால் அந்த ரௌடியின் மனதில் நிரந்தர ரௌடியாகி விடுகிறார். இவர் அனைவருக்கும் உதவி செய்வதால் , இவருக்கு இன்னும் சில எதிரிகளும் கிடைத்து விடுகிறார்கள். ஒரு சாதரண இளைஞன் முறியடித்து வாழ்வில் ஜெயிக்கிறானா? இல்லையா? என்பதே கதை.

 இதேப் போல் பல படங்கள் வந்தாலும். இதில் கொஞ்சம் நம்பும்படியாக சில காட்சிகளும், கதையமைப்பும் இருக்கிறது.
அதுவே படத்தின் மிகப்பெரிய பலம். அறிமுக நடிகரான திலீபன் , மிகவும் எதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார். அஞ்சலியிடம் வழியும் பொழுதும் சரி, உன்னையே மறந்தாலும், அன்னையை மறக்காதே என்று அன்னையை நெகிழ்த்துவதும் சரி, ஆக்ரோஷமாக  எதிரிகளிடம் மோதும் போதும் சரி அழகாக பலவிதமான பரிணாமங்களை காட்டுகிறார்.

அஞ்சலி சொல்லவே வேண்டாம். அவரின் அழகில் அனைவரும் நாய்குட்டிப் போல் தொடரலாம் :). அவரின் ஆங்கில வகுப்புக் கலாட்டா மிகவும் அருமை. அதுவும் எங்கே பார்த்துக் கொண்டாலும் "Have a nice day" என்று அலட்டிக்கொள்வது அருமை. ரொம்ப பந்தா பண்ணுவதும், அலட்டுவதும் கூட தனி அழகு. :)

சரண்யா பொன்வண்ணன், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான தாய். ஆனால் அவர் காட்டும் பாசம் நிஜமான பாசமாக நம்மை நெகிழ்த்துகிறது. ஆரம்ப காட்சியில் பையனுக்கு அறிவுரை சொல்லும் பொழுது, "அப்பா வாட்ஸ் மேனாம், அவங்க அண்ணன் வார்டு பாயாம். பெரிய படிச்ச குடும்பம்டா, எல்லாம் கவுர்ன்மெண்ட் உத்தியோகம். " என்று அவர் வெள்ளந்தியாக சொல்வது நம்மை அறியாமல் சிரிக்க வைக்கிறது.

நிறைய நட்சத்திரங்கள் உதாரணத்திற்க்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஜெயப்பிரகாஷ், சம்பத் , ஜகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் கின்ஸ்லின் முயற்ச்சியை நிச்சயமாக பாராட்ட வேண்டும். படத்தை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். ஒரு கிரைம் பட அளவிற்க்கு போரடிக்காமல் கொண்டு சென்ற விதம் அருமை. எல்லா படத்திலும் முடிவு காட்சியில் நாயகன் அடித்து நொருக்கி விடுவார் அனைவரையும். ஆனால் இந்த படத்தில் நல்ல லாஜிக் சொல்லப் படுகிறது. நிறைய ஓட்டைகளும் இருக்கிறது உதாரணத்திற்க்கு அவரை அடைத்து வைத்து விட்டு, எல்லா வேலையும் செய்து கொண்டிருப்பது.கடைசியில் கொள்வது போன்ற விஷயங்கள்.

இசை கிப்ரான்(Ghibran), சிலப் பாடல்கள் நன்றாக இருக்கிறது. ஆனால் மனதில் நிற்க்கவில்லை.



  ஒரு சாதரண மனிதன் விழித்துக் கொண்டு நடக்கும் தப்புகளை தட்டிக் கேட்க வைத்திருப்பது மிகவும் அருமை. சில நேரங்களில் நமக்கு பயமாக கூட இருக்கிறது, இப்படி நம் நாட்டில் எங்கோ நடக்கிறது என்பது. நம்மிடம் இது போன்ற படங்கள் கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நல்லது. நல்லது செய்ய நினைத்தால் நல்லதே நடக்கும் என்பதே நம்பிக்கை.

நீங்களும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மீண்டும் சந்திப்போமா?

No comments: