Friday, March 08, 2013

ஹ......ரி.....தா....ஸ்.


அன்புள்ள தோழமைகளே!!


வணக்கம். மீண்டும் ஒரு நல்ல படத்தோடு உங்களை நான் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சமீபகாலத்தில் வெளியான எத்தனையோ படங்களைப் பற்றி எழுத நினைத்தாலும் அவ்வளவு விருப்பம் வரவில்லை. மனம் தழுப்புகிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த படத்தைப் பார்த்த பின்பு நிச்சயம் தழும்பும். அட கண்டுபிடிச்சிட்டிங்களே ஹ......ரி.....தா....ஸ்.


குழந்தைகள் சந்தோஷத்தை அள்ளித் தரும் தேவதைகள். குழந்தைகளைப் பற்றிய படம்தான் இது. என்கவுன்டர் சிறப்பு அதிகாரியாக சிவதாஸ்(கிஷோர்). அவருடைய குழந்தை ஹரிதாஸ் (ப்ரிதிவிதாஸ்). ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தை. இந்த குறைபாடு உடைய குழந்தை யாருடனும் பேசாமல், தனக்குள் ஒரு உலகை உருவாக்கி அதில் வாழ்வார்கள்.
பிறந்த உடன் தாயை இழந்து விடும் ஹரி, பாட்டியுடன் வளர்கிறார். பாட்டியும் இறக்க தந்தையில் கீழ் வளர்கிறார். எதையோ பார்த்து பயந்த ஹரியை மருத்துவரிடம் கொண்டு காட்டும் பொழுது, இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று திட்டுகிறார். மருத்துவரின் ஆலோசனைப்படி சாதரண பள்ளியில் சேர்க்க சொல்லுகிறார். அங்கே அழகு தேவதையாக நம்ம அமுதவள்ளி (சினேகா) ஆசிரியையாக. ஹரியின் கையில் எப்பொழுதும் ஒரு குதிரை பொம்மை இருக்கிறது. அதுதான் ஒரு திருப்புமுனையாக இருக்கிறது ஹரியின் வாழ்வில். எப்படி இந்த தந்தை இந்த குழந்தையை இந்த குறைபாட்டில் இருந்து மீட்டு ,வேதனை மனிதனாகமல் சாதனை மனிதனாக மாற்றுகிறார் என்பதே கதை.


கிஷோர் அந்த பார்வையிலேயே ஆளை அசத்துகிறார். ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்கும் போதும் சரி, ஒரு பாசமுள்ள தந்தையாக நீ மட்டும்தாண்ட எனக்கு இருக்கு, உனக்கு என்ன வேணும்னே எனக்கு தெரியலேயே என்று உடைந்து அழும் போதும் சரி அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். குழந்தைக்கு தானே கோட்சாக மாறி "வா.. வா... ஓடு.. ஓடு..." என்று சொல்லும் பொழுது நாமும் நம்மை அறியாமல் ஓடு.. ஓடு.. என்று சொல்ல ஆரம்பிகிறோம்.


சினேகா மீண்டும் தன் முத்திரையை அழகாக பதித்திருக்கிறார். குழந்தைகளுக்கு பாடம் சொல்லும் பொழுது நடித்து காட்டும் இடங்களில், ஹரியின் தந்தையும் உடன் அமர்ந்து இருப்பதால் தடுமாறும் பொழுது வெட்கத்தையும், ஹரிய காணம்ங்க என்று சொல்லி கதரும் பொழுது தாய்மையையும் வெளிப்படுத்தி அசத்துகிறார். ஒவ்வொரு காட்சியிலும் நெஞ்சை அள்ளிச் செல்கிறார்.


அட யாருங்க அந்த குட்டி பிரிதிவி. அப்படி ஒரு அசத்தல் நடிப்புங்க. அவனுடைய அந்த ஏக்கத்தையும், இயலாமையும் பார்த்து கன்னங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் கோடுகள். இப்படிப் பட்ட அனைத்து குழந்தையும் அணைத்து மீட்டெடுக்க வேண்டும் போல் ஒரு பரபரப்பு உண்டாகிறது. ஆனால் படம் விட்டு வரும் பொழுது நம் நெஞ்சம் முழுவதும் ஹரிதான் நிறம்பி வழிகிறான்.


இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் வியாபார நோக்கோடு கொஞ்சம் வன்முறையும் சேர்த்திருப்பது, குடத்துப் பாலில் துளி விஷம் கலந்தது போல் இருக்கிறது. கதையை வேறு மாதிரி கொண்டு சென்றிருக்கலாம். ஆதி (பிரதீப் ரவாட்) வில்லன் வேண்டும் என்பதற்க்காக சேர்த்தது போல் இருக்கிறது. சூரி கொஞ்சம் கலகலக்க வைக்கிறார்.

எந்த குழந்தைக்கும் தாயோ அல்லது தந்தையோ மிக முக்கியம் என்பது மிக தெளிவாகிறது. ஒரு பொது இடத்தில் ஹரி தெரியாமல் செய்யும் தவறுக்கு , ஒருவர் திருட்டு பட்டம் கட்டுவதும், அப்பொழுது சினேகா, அவன் ஒரு சிறப்பு குழந்தை அவனுக்கு இது தெரியாது என்று கதறும் பொழுது, பைத்தியமா.. என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் கேட்பார். அவர் இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தின் அங்கமாக பார்க்கிறேன். ஏனென்றால் நம் மக்கள் தனக்கென்று வந்தால் அது வலியாகவும், மற்றவருக்கு வந்தால் அதை நோயாகவும் பார்க்கிறோம். இந்த எண்ணத்தைக் கூட மாற்ற வேண்டும். இது என்ன என்று தெரியாதவர் கூட தெரிந்து கொள்ள வைத்த இயக்குனருக்கு (G.N.R குமரவேலன்) நிச்சயம் நாம் நன்றியையும், பாராட்டையும் வழங்குவோம். டாரே சமீன் பர் (taare zameen par) என்ற இந்தி படமும் இது போன்ற ஒரு குறைபாட்டை வெளிப்படுத்தும் படம்தான். அதே தாக்கம் எனக்கு இந்த படத்தை பார்க்கும் பொழுதும் ஏற்பட்டது.


Movie Poster
Directed by
G.N.R.Kumaravelan
Written by
G.N.R.Kumaravelan
A.R.Venkatesan
Starring
Kishore
Sneha
Prithviraj Das
Soori
Pradeep Rawat
Music by
Vijay Antony
Cinematography
R. Rathnavelu
Editing by
Raja Mohammed
Studio
DR V RAM Production Private Limited
Release date(s)
February 22, 2013
Country
India
Language
Tamil

இசை விஜய் ஆண்டனி, காதிர்க்கு இனிமையான பாடல்களை தந்திருக்கிறார். குத்து பாட்டு இல்லாத படம் . அன்னையின் கருவில் பாடல் உடலில் புது மின்சாரத்தை பாய்ச்சுகிறது என்றால் அது மிகையாகாது. அன்னாமலை என்பவர் பாடல் வரிகளை நமக்கு தந்திருக்கிறார். இந்த பாடலுக்காக நிச்சயம் இவருக்கு ஒரு ஓ போடலாங்க!!....




இந்தியாவில் மட்டும் 88 குழந்தைகளில் 2 என்ற விகிதத்தில் பிறப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இது போன்ற குழந்தைகளை தெய்வக் குழந்தையாக பாவித்து, அன்பு காட்டி நாம் அனைவரும் காப்போம் என்று உறுதி கொள்வோம். மீண்டும் சந்திப்போமா!!!


வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!..

No comments: