Saturday, May 25, 2013

சூது கவ்வும் திரைவிமர்சனம் (Soodhu Kavvum movie review)

அன்புள்ள நண்பர்களே!!


வணக்கம். 


சமீபகாலமாக நமக்கு நிறைய வித்தியாசமான படங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதுவும் குறைந்த முதலீட்டில், புது முகங்களை வைத்து எடுப்பது மிகவும் சிறப்பு. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் மிகவும் வித்தியாசமாகவும், நகைச்சுவையை கலந்தும் கொடுப்பது. அதே வரிசையில் நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் சூது கவ்வும்.


தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணம் போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இவர். அதைப் போலவே இந்த படத்திலும் தன் இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். 


சரி வாங்க படத்தை பார்க்கலாம் . இந்த படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான். தாஸ் (விஜய் சேதுபதி) பொதுவாக கடத்தல் தொழில் செய்பவர். ஆனால் கொள்கையோடு சின்ன சின்ன கடத்தல் செய்பவர். அது என்னவென்றால் ஐந்து கொள்கைகளை வைத்துக் கொண்டு அதை மீறாமல் கடத்த வேண்டும் என்று எண்ணுபவர். அவருடன் காதலியாக பயணிக்கிறார் சஞ்சிதா ரெட்டி. மூன்று நண்பர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒரு சண்டையில் தாஸ் உடன் சேர்கிறார்கள். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஒரு மந்திரியின் மகனைக் கடத்த திட்டமிடுகிறார்கள். அதனால் இவர்களுக்கு பெரும் லாபம் இரண்டு கோடி கிடைக்கும் என்று தோன்றுவதால். ஏற்கெனவே அரசியல்வாதிக்கும், மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் மகன் தானே தன்னை கடத்த திட்டமிடுகிறான். இவர்களும் அதே நாளில் திட்டமிடுகிறார்கள். எப்படியோ கடத்தியும் விடுகிறார்கள். மகனும் இதற்க்கு கூட்டாக இருப்பதால் 50% என்று பிரித்துக் கொள்வதாக முடிவு செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதியோ இவர்கள் கேட்கும் தொகைக்கும், பேச்சுக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. நான் போலிஸ் மூலம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார். முடிவு என்ன ஆனது? பணம் கிடைத்ததா? இருவரும் பகிர்ந்து கொண்டார்களா? இல்லை காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார்களா? என்பதுதான் மீதிக்கதை.




கதையின் மிகப் பெரிய பலம் நகைச்சுவைதாங்க. ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் நகைச்சுவையை சேர்த்திருப்பது மிகவும் ருசிக்கிறது. தாஸின் கொள்கைகளையும், அவன் செய்யும் சின்ன கடத்தலையும் காட்டுவது மிகவும் ரசிப்பு. கடத்தி முடித்து விட்டு பணம் கைக்கு வந்ததும், டிப்ஷ் கொடுத்து அனுப்புவது இதுவரை பார்க்காத ஒரு காட்சி. சஞ்சிதா ரெட்டியை ஒரு கற்பனை காதலியாக காட்டி இருக்கிறார்கள். அவரும் அவருடைய பங்கை தெளிவாக செய்திருக்கிறார்.இவரை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் காட்சி மிகவும் இனிமை. அரசியல் வாதியாக பாஸ்கரும், அவருடைய மகனாக அருமை பிரகாசமும் நடித்திருக்கிறார்கள். அருமை பிரகாசம், தன்னுடைய அப்பாவிடம் எப்படி பணம் வாங்குவது என்பதை அவர் செயல்படுத்தும் காட்சி அனைவரிடமும் சிரிப்பை ஏற்படுத்தும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களை பிடிப்பதற்க்காக வரும் காவல்துறை அதிகாரி பிரம்மா சொல்லவே வேணாங்க அவ்வளவும் சுவாரஸ்யம் மிகுந்த பகுதிகள். ராதா ரவி ஓரிரு காட்சியில் மட்டுமே வந்தாலும் மிகவும் கணம்.


இப்படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் நலன் குமாரசுவாமி. இவர் நாளைய இயக்குனர் மூலம் அறிமுகமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தின் மூலம் நல்ல முத்திரையை பதித்து விட்டார் என்று நம்பலாம். இசை சந்தோஷ் நாராயணன். 


நிச்சயமாக பாராட்டவேண்டிய விஷயம் நகைசுவை, குத்துப்பாட்டு மற்றும் டூயட் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் கொடுத்திருப்பது.


வசனங்கள் உதாரணத்திற்க்கு இது இட்லின்னு சொன்னா, சட்னிக் கூட நம்பாது, சென்னைக்கு என்ன பண்ணலாம்ன்னு திட்டம் போட்டு வந்தவன் சாதிக்கல, என்னப் பண்ண போறோம்ன்னே தெரியாம வந்தவங்கதான் ஜெயிச்சிருக்காங்க போன்றவை மிகவும் சிறப்பு.


ஆரம்பக் காட்சிகளில் அடிக்கடி டாஸ் மார்க்கை காட்டி தண்ணி அடிக்க வைப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.


அதிகமான முதலீடு இல்லை, அனைவரும் புது முகங்கள், வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்பு. நிச்சயம் பாராட்டலாம்.


நீங்களும் உங்கள் கருத்தை சொல்லுங்களேன்?


மீண்டும் சந்திக்கலாமா?


வணக்கம். வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!

No comments: