Thursday, November 29, 2012

உன்னைச் சரணடைந்தேன்!

பாரதியார் கண்ண பரமாத்மாவைப் பெண்ணாகப் பாவித்து பாடியவை தேனினும் இனியதாக இருக்கும். அவர் என்ன சொல்கிறார்! கண்ணம்மா! உன் அழகு மின்னலைப் போன்றது. உன்னுடைய புருவங்கள் மதனின் வில்லாகும். வானில் விளங்கும் சந்திரனைப் பிடித்த பாம்பினைப் போன்ற அடர்த்தியான கூந்தலை உடையவளே! உன் மங்கள வாக்கு என்றும் அழியாத ஆனந்த ஊற்றாகும். மதுர வாயோ அமிர்தகலசம். புன்னகை சிந்தும் இதழ்கள் அமிர்தம். சங்கீதம் தவழும் மென்மையான குரல் சரஸ்வதியின் வீணையைப் போன்று இனிமை சேர்க்கும். இங்கிதம் தரும் நாத நிலையமாக உனது இருசெவிகளும் திகழ்கின்றன. சங்கினைப் போன்ற கழுத்தினைப் பெற்றவளே! மங்களம் தரும் உன் இருகரங்களில் மஹாசக்தி வாசம் புரிகிறாள். ஆலிலையைப் போன்ற வயிற்றினைக் கொண்ட நீ, அமிர்தத்தின் இருப்பிடமாய் திகழ்கிறாய்! சங்கரனைத் தாங்கும் நந்திகேஸ்வரனைப் போன்ற பத சதுரத்தில் கோலம் செய்பவளே! செந்தாமரை மலர் போன்ற உன் திருப்பாதங்களை லட்சுமிபீடத்தில் தாங்கச் செய்திருப்பாய். உன் திருக்கோலம் அன்பும், மேலான ஞானமும் பொங்குவதாக இருக்கும். உன்னிடத்திலிருந்து அருள் நாலாபுறங்களிலுமுள்ள திசையெங்கும் பரவும்.அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட எங்கும் நன்மையை நாட்டிடுவாய் அன்னையே! உன்னைச் சரணடைந்தேன்

No comments: